தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் தோற்கக் கூடாது’

3 mins read
02ab8742-6dea-4cb9-abc2-486f1b20e90d
ஜெயம் ரவி. - படம்: ஊடகம்

“தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் தோற்கக் கூடாது, மகிழ்ச்சியுடன் இருந்தால் வருங்காலம் உங்களைத் தேடிவரும்,” என கோவையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் அன்பர் தினத்தன்று நடைபெற்றன.

நிகழ்வில் மாணவ மாணவிகளிடம் அன்பர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம் ரவி, “வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள். இப்போது இருப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களைத் தேடி வரும்,” எனக் கூறியவர், “தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஒரு தப்புமில்லை. ஆனால், வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால்தான் பெரும் தப்பு,” என அறிவுரை வழங்கினார்.

அவரிடம் காதலர் தினம் குறித்து மாணவர்கள் கருத்து கேட்டதற்கு, “காதல் அனைத்தையும் கடந்த ஒன்று, அனைவரையும் மதிக்க வைக்கிறது,” என்றார்.

18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, ஒரு தலை காதல் இருந்தபோது ‘மஞ்சம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ரசித்ததாகக் கூறி அந்தப் பாடலை பாடிக் காட்டினார்.

திருமணம் குறித்த கேள்விக்கு, “நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்றால், உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழ்ந்த பெண் சொல்லவேண்டும். அதுதான் வாழ்க்கை,” எனக் கூறினார்.

பின்னர், மாணவர்களின் ஆசைப்படி மேடையில் நடனமாடியவர், தொடர்ந்து நடனமாடும்படி மாணவர்கள் கேட்டதற்கு, வாய்ப்பில்லை என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

மாணவர்களைத் தம்பிகள் என்று அழைத்த அவர், ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்பது பழமொழி. ஆனால், உண்மையில் “அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள ‘சைரன்’ திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, “சைரன்’ படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம். குடும்பத்திற்காக இந்தப் படத்தைச் செய்துள்ளேன். எனக்கு சவாலாக இருந்த இந்தப் படம் ஒரு இயற்கை உணவுபோல் சுவையாக இருக்கும்,” என்றார்.

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) வெளியாகிறது.

இப்படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் ‘பிரதர்’ படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அண்மையில்தான் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதனிடையே அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கி வரும் ‘ஜீனி’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அத்துடன், மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக்லைஃப்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் ‘ஜீனி’ படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த வாரம் படக்குழு வெளிநாடு பறக்கவும் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என விழா ஒன்றில் ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி அமைந்தது போல, 2ஆம் பாகத்திலும் ஒரு வலுவான வில்லனைத் தேடும் வேட்டையை ஆரம்பித்துவிட்டார் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் மோகன்ராஜா.

கதை தயார், நாயகன் தயார், நாயகியும் தயார், ஆனால் வில்லன் பாத்திரத்துக்கு பொருத்தமானவர் தான் இன்னும் முடிவாகவில்லை.

‘தனி ஒருவன்’ படத்தில் யாரும் எதிர்பார்க்காத வில்லனாக அரவிந்த்சாமி அமைந்தது போல், இதிலும் ஒரு வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்த உள்ளோம்.

அந்த வலுவான வில்லன் முடிவானதும் அடுத்தடுத்த அறிவிப்புகள் ராக்கெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து வரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்