300 புலிகளுடன் பயந்தபடி நடித்தேன்: ஷிரின்

300 புலிகளுடன் பயந்தபடி நடித்தேன்: ஷிரின்

3 mins read
9f9a62c5-2a3e-455b-b5f3-9b0fdc9c3d21
ஷிரின். - படம்: ஊடகம்

‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ படத்திற்காக தாம் 300 புலிகளுடன் இணைந்து நடித்ததாகச் சொல்லி பீதி கிளப்புகிறார் இளம் நாயகி ஷிரின் கஞ்ச்வாலா.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் புகழ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஓர் அப்பாவி இளையர், பூனைக்குட்டியை வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு புலிக்குட்டியை வளர்க்கிறார்.

நாளடைவில் அது வளர்ந்து பெரிதாகிறது. அப்போதுதான் அந்த இளையருக்கு விவரம் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.

பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி உள்ளனர். மொத்தப் படப்பிடிப்பும் முடிவதற்குள் தாம் 300 க்கும் மேற்பட்ட புலிகளுடன் நடிக்க நேர்ந்ததாக பயம் கலந்த பெருமிதத்துடன் சொல்கிறார் நாயகி ஷிரின்.

“இப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது முதலில் பயந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. எனினும் படப்பிடிப்பின்போது எந்தச் சிக்கலும் எழவில்லை.

“படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் புலிகள் குறித்து அடிப்படை விவரங்கள் அனைத்தையும் தெளிவாக விவரித்து இருந்தார் இயக்குநர். சின்னஞ்சிறு புலிக்குட்டி ஒன்று நன்கு வளரும் வரை நடைபெறும் சம்பவங்கள் உள்ளன. எனவே பல்வேறு வயதுடைய புலிகளுடன் நானும் நடிகர் புகழும் இணைந்து நடிக்க வேண்டி இருந்தது.

“தாய்லாந்தில் உண்மையான புலிகளை வைத்துத்தான் காட்சிகளை படமாக்கினோம். அது மிக சவாலான அனுபவமாக இருந்தது,” என்கிறார் ஷிரின்.

எந்த ஒரு தருணத்திலும் புலிகளுக்கு நேர் எதிராக நிற்கக்கூடாது. எப்போதும் புலிகளுக்கு பக்கவாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியிருந்தாராம்.

மேலும், புலிகள் அதிக சத்தத்தை விரும்புவது இல்லையாம். அதனால் காட்சிகளை படமாக்கி முடித்த பின்பும் படக்குழுவினர் தேவையின்றி அரட்டை அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.

“ஒரு புலியை வைத்து அதிகபட்சமாக ஒரு மணி நேரம்தான் படப்பிடிப்பை நடத்த முடியும். தாய்லாந்து புலிகள் பராமரிப்பு மையத்தில், தொடர்ந்து பார்வையாளர்கள் வந்து போகிறார்கள். எனவே அமைதியை விரும்பும் புலிகள் எரிச்சலுக்கு ஆளாகிவிடுகின்றன.

“ஒரு புலி திடீரென இடைவிடாமல் நடக்கத் தொடங்கினால் அது பொறுமை இழந்துவிட்டதாகக் கருத வேண்டுமாம். பெரும்பாலான புலிகள் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இவ்வாறு நடக்கத் தொடங்கி விடுகின்றன. அதனால்தான் ஒரு மணி நேரத்திற்கு ஒரு புலியை மாற்றிக் கொண்டே இருந்தோம்,” என்று சிரிக்கிறார் ஷிரின்.

இயற்கையையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் எனும் நல்ல கருத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது. அதுதான் தாம் இந்த படத்தில் நடிக்கக் காரணம் என்கிறார்.

இப்படத்தில் நடிக்கும்வரை வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ள இவர், இப்போது செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

“இந்தப் படத்தில் நான் சில புலிக்குட்டிகளை பராமரிக்கும் பெண்ணாகவும் நடித்துள்ளேன். புலிக்குட்டியை குளிப்பாட்டி அவற்றுக்கு உணவூட்டி தூங்கச் செய்யவேண்டும். அந்தக் காட்சிகளில் நடித்தபோது புலிக்குட்டியைத் தூக்கி எனது தோள்களில் சுமக்க வேண்டும், கூடவே நடனமும் ஆட வேண்டும் என்றார் இயக்குநர்.

“அந்தக் காட்சிகளில் நடித்தபோதுதான் புலிகளின் உண்மையான எடை எவ்வளவு இருக்கும் என்பது எனக்குத் தெரிய வந்தது. ஒரு புலிக்குட்டி குறைந்தபட்சம் 30 கிலோ எடை கொண்டிருக்கும்.

“புலிகள் கொட்டாவி விடும்போது அதன் கூர்மையான பல்வரிசையை கண்டதும் குலைநடுங்கிப் போகும். ஒரு புலி கொட்டாவி விடுவதைப் பார்த்த அடுத்த கணமே என் அம்மா புலம்பத் தொடங்கி விடுவார். அவரைச் சமாதானப்படுத்துவது பெரிய வேலையாக இருந்தது. பெற்ற தாயின் அன்பு அலாதியானது,” என்கிறார் ஷிரின்.

“உணவூட்டும்போது அதன் பற்களால் நம் விரல்களை மெல்ல மெல்ல கடிக்கும். மடியில் வைத்துக் கொஞ்சும்போதும் நாம் காயப்பட்டுவிடக்கூடாது என்பதில் அவை கவனமாக இருக்கும்,” என்று புலிகளைப் பாராட்டிப் பேசுகிறார் ஷிரின்.

குறிப்புச் சொற்கள்