‘சத்தமின்றி முத்தம் தா’ - நினைவுகளை மீட்க நடக்கும் ஒரு போராட்டம்

‘சத்தமின்றி முத்தம் தா’ - நினைவுகளை மீட்க நடக்கும் ஒரு போராட்டம்

2 mins read
fe0fba3f-d81e-4946-9f3b-6063b6fdd83e
‘சத்தம் இன்றி முத்தம் தா’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘ரோஜாக்கூட்டம்’ ஸ்ரீகாந்த் நடித்திருக்கும் புதிய படம் ‘சத்தமின்றி முத்தம் தா’. ராஜ்தேவ் இயக்கி உள்ளார். திகில் படமாக உருவாகி உள்ளது.

“கதையில் வரும் ஒரு முக்கியமான காட்சி, ரசிகர்களைக் கலங்க வைப்பதுடன் இந்தத் தலைப்புக்கும் நியாயம் சேர்க்கும்.

“தலைப்பை நம்பி திரையரங்கம் வரும் ரசிகர்கள், முற்றிலும் எதிர்பாராத ஒரு கதையை திரையில் பார்க்கப் போகிறார்கள். சில காட்சிகள் பதைபதைக்க வைக்கும்.

“படத்தின் கதை ஒரு சாலை விபத்தில் இருந்து தொடங்கும். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதுபோல் ஒரு கொடுமை எதுவுமில்லை.

“இறந்தவரின் குடும்பத்தை அது நிலைகுலையச் செய்துவிடுகிறது. சாலை விபத்தில் சிக்கி நினைவுகளை இழப்பது அதைவிடக் கொடுமையானது.

“இந்தியாவில் ஆண்டு தோறும் காவல்துறை வழியாகப் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம். இது ஒவ்வோர் ஆண்டும் 11 விழுக்காடு அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

“விபத்து பற்றிய செய்தியைப் படிக்கும்போதெல்லாம், விபத்துக்குள்ளானவரின் பாலினம், வயது, பார்த்து வந்த வேலை, எப்படி விபத்து நடந்தது, விபத்துக்கு யார் காரணம் என்பதையெல்லாம் கூர்ந்து வாசிப்பேன்.

“கொலை முயற்சி செய்யும் நோக்குடன் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் விபத்துகளும் உண்டு என்பதையும் விபத்தில் ஒருவர் தன் நினைவுகளை இழந்து, சிகிச்சை முடிந்து சொந்த வீட்டாருடன் போக மறுத்ததையும் படித்த போது, இந்தக் கதைக்கான கரு பிறந்தது,” என்கிறார் இயக்குநர் ராஜ் தேவ்.

கதைப்படி, பதின்ம வயதின் இறுதியில் காதல் வயப்படும் நாயகனும் நாயகியும் எதிர்பாராத சூழ்நிலையில் பிரிந்து விடுகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சாலை விபத்தில் சிக்கிக் கிடக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான் நாயகன்.

அப்பெண் அவனுடைய காதலி. உடனடியாக அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுகிறான். ஆனால் காதலி கண்விழித்த பின்னர் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன.

அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் என்ன என்பதுதான் கதையாம்.

குறிப்புச் சொற்கள்