‘இந்தியைவிட தமிழில் சரளமாகப் பேசுவேன்’

‘இந்தியைவிட தமிழில் சரளமாகப் பேசுவேன்’

3 mins read
677a711e-b1bc-41c5-9f4b-21d97908f6b1
மெலினா. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என்கிறார் இளம் நாயகி மெலினா.

தாய் மொழி இந்தி என்றாலும், இவரால் தமிழில் சரளமாக உரையாட முடிகிறது.

‘அஷ்வின்ஸ்’ படத்தில் இவரது நடிப்பு இயல்பாக இருந்ததாக இளையர்கள் பாராட்டுகின்றனர். இதையடுத்து ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் நடித்துள்ளார்.

மெலினா மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். எனினும் இவரது தந்தை தொழில் நிமித்தமாக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்ல வேண்டி இருந்ததாம். எனவே அவரது வசதிக்காக மொத்த குடும்பமும் சென்னையில் குடியேறிவிட்டது.

அதன் பிறகு அவ்வப்போது சொந்த ஊருக்குச் சென்று சில நாள்கள் தங்கி இருந்தாலும், பெரும்பாலான நாள்கள் சென்னையில்தான் இருப்பாராம் மெலினா.

“எனது பள்ளிப்படிப்பு எல்லாம் சென்னையில்தான். பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். என் பெற்றோர் இன்று உள்ள நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைத்துள்ளனர்.

“விவரம் தெரிந்த வயது முதல் பெற்றோரின் இந்த உழைப்பையும் இருவரும் பட்ட சிரமங்களையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்பா தன் தொழிலை கவனித்துக்கொள்ள, அம்மா ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

“இருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்னுடைய முதல் பொறுப்பு. அப்பா இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்,” என்று தனது குடும்பச் சூழலை விவரிக்கும் மெலினாவுக்கு சென்னையில்தான் நண்பர்கள் அதிகமாம்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், நண்பர்களுக்கு தமிழ்தான் நன்கு தெரியும் என்பதால் தானும் தமிழிலேயே உரையாடுவது வழக்கம் என்கிறார்.

“இப்போது இந்தியை விட தமிழில்தான் சரளமாக பேச முடிகிறது. எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். விடுதி மேலாண்மை தொடர்பாக பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ள அவர் விரைவில் படிப்பை முடித்து விடுவார்.

“வீட்டில் அனைவருமே படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள். பொறியியல் படிப்பை முடிக்கும் முன்பே சினிமா மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது. இரு துறைகளுமே எனக்குப் பிடித்தமானவைதான்.

“சிறு வயது முதலே ‘நன்றாகப் படிப்பேன். பெரிய கதாநாயகியாக வலம் வருவேன்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பேனாம். ஆனால் எனது இந்த விருப்பத்திற்கு பெற்றோர் தடை விதிக்கவில்லை,” என்கிறார் மெலினா.

நல்ல திரைப்படங்களாகத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது மட்டுமே இவரது பெற்றோரின் அறிவுரையாக இருந்துள்ளது. சினிமா துறையில் அறிமுகமாக மாடலிங், விளம்பரத்துறைதான் சரியான வழி என நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர்.

“எனவே, பொறியியல் படிப்பை முடித்த கையோடு மும்பைக்குப் பறந்துவிட்டேன். அங்கிருந்தபடி நிறைய விளம்பரப் படங்களில் நடிக்க முடிந்தது. மேலும் ’மிஸ் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு அழகிப் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் அமைந்தன.

“இதையடுத்து சமூக ஊடகங்கள் மூலமாக தேடி வந்த வாய்ப்புதான் ‘மறக்குமா நெஞ்சம்’ படம். எனக்கு இப்போது 24 வயது ஆகிறது. எல்லா வாய்ப்புகளும் என்னைத் தேடி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் என் மனதில் இல்லை.

“நான் நடித்துள்ள இரண்டு படங்களுக்கான நடிப்புத் தேர்வில் யார் அழைப்பும் இன்றி நானே நேரில் சென்று பங்கேற்றேன். எனது திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றேன்,” என்கிறார் மெலினா.

வரலாற்றுக் கதையில் நடிக்க விரும்பும் இவர் இந்தியில் ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் ஆகிய இருவருடனும் நடிக்க விரும்புகிறார். தமிழில் சூர்யா, விஜய், அஜித், விஜய் சேதுபதி என மெலினாவுக்கு பிடித்தமான கதாநாயர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

’பத்மாவத்’ போன்ற வரலாற்றுக் கதையம்சம் உள்ள படைப்புகளில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்கேற்ப என்னை தயார் படுத்தி வருகிறேன்.

“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பது என்னை சோகத்தில் ஆழ்த்தி விட்டது. ஏனெனில் அவர் திரைப்படங்களில் நடிக்க இனி நேரம் ஒதுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே அவருடன் இணைந்து நடிக்க இயலாது என நினைக்கும்போது வருத்தமாக உள்ளது,” என்கிறார் மெலினா.

குறிப்புச் சொற்கள்