தனது இயக்கத்தில் உருவாகும் ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் வெளியீடு கண்டதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
சில உண்மைச் சம்பவங்களை அலசும் படைப்பாக இப்படம் உருவாகி உள்ளது என்று அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் வாழும் சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்னே நடக்கும் சில அடிப்படை விஷயங்களைத் தட்டிக் கேட்க துணிவின்றி அவற்றைக் கடந்து போகிறோம்.
“ஆனால் இது சமுதாயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம். இது குறித்துதான் இப்படத்தில் அலசி உள்ளேன்,” என்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
தனது படைப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் இது மக்களைச் சுற்றி நடக்கும் அரசியல் குறித்து விவாதிக்கும் கதை என்றும் கூறுகிறார்.
“இளையர்கள், முதியவர்கள் என அனைத்து சமூகத்தினர் மனங்களிலும் இப்படம் விழிப்புணர்வையும் தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் ஏற்படுத்தும்.
‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி உள்ளேன்.
“இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், சுபாஷ், ஆகியோருடன் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி, சோஃபியா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்,” என்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டுகிறார்.
மேலும், சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது என்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

