‘சைரன்’ படத்தின் முதல்நாளன்று பல ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் ஜெயம் ரவி. ஆனால் அந்த வாய்ப்புக் கிடைக்காத ரசிகர் ஒருவரின் மனக்குமுறலை இணையத்தில் படித்த ஜெயம் ரவி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
குடும்பம், காதல், சண்டை என எந்த வகை படமாக இருந்தாலும் வெற்றிப்பெற்று கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானார். முதல் படம் ‘ஜெயம்’ முதல் அண்மைய படம் ‘சைரன்’ வரை கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பவர் ஜெயம் ரவி.
ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமையன்று வெளியானது ‘சைரன்’ படம். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் நாள், முதல் காட்சியை ஜெயம் ரவி மதுரையில் இருக்கும் ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார். அதன் பின்னர் பல ரசிகர்கள் அவருடன் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் இணையத்தளத்தில் “உங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் படம் பார்க்க வந்திருந்தேன். ஆனால், முடியவில்லை. நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுடன் மட்டும் செல்ஃபி எடுத்துவிட்டு என்னைப் போன்றவர்களை திருப்பி அனுப்பி விட்டீர்கள். அது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாகிவிட்டது. உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை,” என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
அதற்கு ஜெயம் ரவி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டதட்ட 300 பேருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பதை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள், கண்டிப்பாக செல்ஃபி எடுத்துக் கொள்வோம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்,’’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் அவர் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சைரன் படத்தைப் பற்றிப் பேசுகையில், “அறிமுக இயக்குநர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கைதி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். முதல் முறையாக நடுத்தர வயதில் சாம்பல் வண்ண முடியுடன் நடித்துள்ளேன்.
“படத்தில் நான் ஓட்டும் வாகனத்தின் ‘சைரன்’ ஒலியைக் கேட்டு, வழியில் செல்வோர் கும்பிட்டு உயிர் காப்பாத்தனும் என்று வேண்டி வழிவிடுவார்கள்.
“மற்றொரு சைரன் போலிஸ் வண்டியில் ஒலிப்பது. இந்த சைரன் ஒலிப்பது எங்கேயோ ஏதோ பிரச்சினை. அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அதைச் சரி செய்யப் போகிறார்கள் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு சைரன்களுக்கும் இடையில் நடக்கும் போட்டா போட்டி தான் இந்த ‘சைரன்’ கதை. அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு.
தொடர்புடைய செய்திகள்
“திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்கணும். இந்தப் படத்தின் இயக்குநர் விஸ்காம் படித்தவர். நானும் விஸ்காம் படித்தவன். அங்கே எந்த மாதிரியான பயிற்சி கிடைக்கும் என்று எனக்கு தெரியும். மேலும் இவர் ‘விஸ்வாசம்’ படத்திற்கு வசனம் எழுதியவர். ஓர் எழுத்தாளருடன் பயணிப்பது மகிழ்ச்சி.
“கீர்த்தி எடை எல்லாம் போட்டு, இந்தப் படத்தில் போலிஸ் வேடத்தில் நன்றாக நடித்திருந்தார். நான் ஒரு கைதியா இந்தப் படத்தில் வரேன். ‘சைரன்’ ஓர் எளிமையான கதைதான்.
“ஜெயம் படம் முதல் சைரன் வரை 22 ஆண்டு திரை அனுபவத்தில் வெற்றி தோல்விகள் இரண்டுமே எனக்கு அந்த ஒரு நாள்தான். அடுத்த படம் என்னை நம்பி தராங்க. நடித்து வெளியான படத்தை அதிகமாக மனதில் எடுத்துக் கொண்டால் அடுத்த வேலைக்கு நான் செல்ல முடியாது.
“இப்போது திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கிறது. ‘குட்நைட்’, ‘பார்க்கிங்’ போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கைத் தருகிறது. முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிய படங்கள் இவை.
இதன் மூலம் கதைதான் முன்னணி நாயகன். கதை நன்றாக இருந்தால் அந்தக் கதையில் யார் நடித்தாலும் வெற்றி பெறலாம்,” என்று கூறினார் ஜெயம் ரவி.

