தன்னுடைய பிறந்தநாளில் தானே பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தனது 23வது படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன், அந்தப் படக் குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி விருந்து பரிமாறினார்.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் என்மீது செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மனநிறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
அதோடு அவரின் பிறந்தநாளையொட்டி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 21வது படத்தின் தலைப்பு ‘அமரன்’ என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அன்று அப்படத்தின் விளம்பரக் காட்சியும் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

