முருகதாஸ் படத்துக்கு எதிரான போராட்டம் பிசுபிசுத்துப்போனது

முருகதாஸ் படத்துக்கு எதிரான போராட்டம் பிசுபிசுத்துப்போனது

2 mins read
29de35ba-81e0-46b5-8bb6-308f4582bae5
சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு பூங்கொத்து கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ். - படம்: ஊடகம்

இயக்குநர் முருகதாசுக்கு எதிராக கோலிவுட்டின் அவுட்டோர் யூனிட் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் பிசுபிசுத்துப்போனது. அந்தப் போராட்டத்தில் எந்தப் படப்பிடிப்புக் குழுவும் கலந்துகொள்ளவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்தது. 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கினர்.

இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட்டை ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள்தான் சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கான அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர்.

இதற்கு கோலிவுட்டின் அவுட்டோர் யூனிட் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில், “தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வெளி மாநிலங்களிலிருந்து உபகரணங்களைக் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அதை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். உடனே இதை நிறுத்தவேண்டும், இல்லையெனில் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரியமாட்டோம்,” என்று அறிவித்தனர்.

இதனால், பிப்ரவரி 16ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தப் படப்பிடிப்பும் ரத்து செய்யப்படவில்லை.

மேலும் சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 தனது பிறந்தநாளை முருகதாஸ் படத்தின் படப்பிடிப்புதளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அதாவது, முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்படவில்லை.

இதுகுறித்து விசாரித்த போது பல தகவல்கள் தெரிய வந்தன. முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது. இது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.

இதன் நிறுவனர் திருப்பதி பிரசாத் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள அவுட்டோர் யூனிட்டுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு அவுட்டோர் யூனிட் இங்கு பணிபுரிந்து வருகிறது.

ஏற்கெனவே படப்பிடிப்புக்கான அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்வது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மேல் இங்குள்ள அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதால், போராட்டத்தை கோலிவுட்டின் அவுட்டோர் யூனிட் கைவிட்டது என்று தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்