படம் முழுவதும் கர்ப்பிணியாக வலம் வரும் கதாநாயகி

2 mins read
1c7773e1-8e6f-4017-af07-f6e0dda2a1fb
மிர்ணா மேனன். - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் விக்ரம் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகிறது ‘பர்த்மார்க்’.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு மிகுந்த உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.

ஆரோக்கியமான வழியில் குழந்தைப்பேறு தரக்கூடிய ஒரு கிராமத்திற்கு தனது மனைவியுடன் வருகிறார் கதாநாயன். குழந்தை பிறந்தால் தன் வாழ்க்கையே மாறிவிடும் என்று பலரும் சொன்னதைக்கேட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பிரசவத்திற்கு காத்திருக்கிறார் மனைவி.

இந்நிலையில் கணவரின் போக்கு விசித்திரமானதாக மாறுகிறது. சுற்றி இருப்பவர்களும் மர்மமான மனிதர்களாகவே தென்படுவதால் அச்சத்திற்கு ஆட்படுகிறார் கதாநாயகி.

யார் இவர்கள், கணவர் ஏன் தன்னை அழைத்து வந்தார் என்று நாயகியின் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்துக்கும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும் என்கிறார் இயக்குநர்.

“பொதுவாக ஒரு படத்திற்கான கதையை எழுதும்போது ஓர் அடையாளத்திற்காகவேணும் ஒரு தலைப்பை தேர்வு செய்வோம். அப்படி வைக்கப்பட்ட தலைப்புதான் ‘பர்த் மார்க்’.

“முற்பிறவியில் நமக்கிருந்த சில உடல் அடையாளங்கள் உள்ளிட்டவை அடுத்த பிறவியிலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதையொட்டி மேலும் சில விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினோம்,” என்கிறார் விக்ரம் சந்திரசேகரன்.

குழந்தைப் பேற்றுக்காக தன் மனைவியுடன் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்கிறார் ராணுவ அதிகாரி ஒருவர். அதன் பிறகு அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் ரசிகர்களைப் பெரும் யோசனையில் ஆழ்த்தும்.

“முழுப் படத்தையும் எடுத்து முடித்தபிறகு ‘பர்த் மார்க்’ என்ற தலைப்புதான் அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. எனவே கதையைத் தேர்வு செய்துவிட்டோம்,” என்கிறார் இயக்குநர் விக்ரம்.

இந்தப் படம் முழுவதும் நிறைமாத கர்ப்பிணியாகவே திரையில் வலம் வந்துள்ளார் நாயகி மிர்ணா மேனன். எனவே அவரது தோற்றம், கர்ப்பிணிக்கான உடல்மொழி உள்ளிட்ட அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனராம்.

“ஏழு மாதக் குழந்தையைச் சுமக்கும்போது வயிறு என்ன கனம் இருக்குமோ அதைக் கணித்து மிர்ணாவின் வயிற்றில் ஒரு பேடு (PAD) கட்டப்பட்டது. பிரசவத்திற்கு முன்பு வரை வயிற்றில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொண்டோம்.

“இப்படிச் செய்வதால் மிர்ணா வெளிப்படுத்தும் நடிப்பு, முகபாவங்கள், உடல் மொழி உள்ளிட்ட அம்சங்கள் சிறப்பாக வெளிப்படும் என எதிர்பார்த்தோம்.

“மிர்ணாவும் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அபாரமானதாக இருந்தது.

“இப்படத்தின் கதாநாயகனான, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார். மேலும் சில முக்கியமான கலைஞர்களும் உள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

“என்னுடைய நீண்ட நாள் நண்பர் இனியவன் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்,” என்று சொல்லும் அறிமுக இயக்குநர் விக்ரம் சந்திரசேகரன், இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு தங்களது உடலில் உள்ள குறிகள், அடையாளங்கள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் நிச்சயம் யோசிக்கத் தோன்றும் என்கிறார்.

குறிப்புச் சொற்கள்