தமிழகத்தில் உள்ள சினிமா திரையரங்குகளில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ரசிகர்களின் வருகை மிகக் குறைவாக உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களுக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகப் போவதில்லை.
அதனால் நஷ்டம் ஏற்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் புதுப்படம் திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடவேண்டும். இல்லையென்றால் புதுப் படங்களை வெளியிடாமல் திரையரங்குகளை மூடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்து இருக்கிறது.
கேரளாவில் ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் படங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு பிப்ரவரி 23 முதல் திரையரங்குகளை மூடி புதுப்பட வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
மக்கள் பலரும் திரையரங்குகளில் படம் வெளியாகி சில வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகிவிடும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலை நீடித்தால் திரையரங்குகளை மூடும் சூழல் ஏற்படும் என்கிறது சங்கம். சென்னையில் பிரபலமான திரையரங்கான ‘உதயம் காம்ப்ளக்ஸ்’ விரைவில் மூடப்படுகிறது என்ற செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

