‘குண்டூர் காரம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து திருப்பதிக்குச் சென்று தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அந்தப் படத்தில் நடித்த நாயகி ஸ்ரீலீலா.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் கூட அடிக்கடி சென்று வருவார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீலீலா திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்.
இவரைப் பார்த்த மக்கள், ஸ்ரீலீலாவா என அதிர்ச்சியில் உறைந்தனர். குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த ஸ்ரீலீலா, விஐபி இடைவேளையின்போது நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்ரீலீலாவுக்கு கோயில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க குவிந்தனர்.
ரசிகர்களுடன் பொறுமையாக நின்று செல்ஃபி எடுத்த பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார். புதியதாக பல படங்களில் நடித்திருப்பதாகவும் தான் நடிக்கப்போகும் படங்களைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்கும் என்றும் கூறினார்.
பொங்கலுக்கு மகேஷ் பாபு ஜோடியாக அவர் நடித்து வெளிவந்த ‘குண்டூர் காரம்’ படத்தில் ஸ்ரீலீலா நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டன.
குறுகிய காலத்தில் பிரபலமானாலும் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. அவரது நடனத்திற்காகவே படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் பிறந்த தெலுங்கரான ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவம் படித்த இவர் 2019ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் முன்னணி நடிகையானார்.
ரவி தேஜாவுடன் ‘தமாகா’ படத்தில் நடித்து கவனம் பெற்றவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற ‘பல்சர்’ பாடல் பிரபலமாக்கியது.
சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப்பழகிய ஸ்ரீலீலா நடனமாடினால் உடல் வில்லாக மாறிவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, லீலாவின் சினிமா வாழ்க்கை புயல் வேகத்தில் மாறியது.
‘குண்டூர் காரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘குறிச்சி மடதாபட்டி’ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இவர் நடனமாடிய காட்சிகள் அதிக கவனம் ஈர்த்தது.
தெலுங்கில் பிரபலமாகி தமிழுக்கு வந்து இங்கு பிரபலமான கதாநாயகிகளின் வரிசையில் ஸ்ரீலீலாவும் இடம் பெறுவாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது கோலிவுட்.

