தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் தேர்வுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு திரை உலகில் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எந்த அளவிற்கு பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு இளைஞர்களும் மாணவர்களும் கூட விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
விரைவில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இன்ஸ்டகிராமில் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் விஜய் தேவரகொண்டா ஒரு பதிவைப் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்திருந்தனர்.
அதைக் கவனித்த விஜய் தேவரகொண்டா, “தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் வாங்குங்கள். உங்களை நேரில் சந்திக்கிறேன்,” என்று பதிவிட்டு இருக்கிறார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் பலரும் அவரது இந்த ஊக்கமான வார்த்தைகளுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

