ரகுல் ப்ரீத் சிங் திருமணம், கோவாவில் கோலாகலம்

3 mins read
3e5ea14b-d7e5-489a-946e-b31669941594
செய்திகள்/ படங்கள்: - தமிழக தகவல் சாதனம்

நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கில்லி’ படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையறத் தாக்க’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்ஜிகே’ , அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ உள்ளிட்ட சில படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தார்.

மேலும் தமிழ், கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரைக் காதலித்து வந்தார்.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக பயணித்து தங்களுடைய நேரத்தை செலவிட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு இது தொடர்பாக தகவல்கள் வெளியாக தொடங்கியது. அதன் பின்னர் ஓராண்டு கழித்து 2021ல் ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பாக்னானி இருவரும் தங்களுடைய காதலை உறுதி செய்தனர்.

காதலிப்பதை வெளிப்படையாக தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்கிடம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் கோவாவில் கடற்கரை ஓரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ராகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பாக்னானி இருவரின் திருமணம் கோலாகலமாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் ‘அனிமல்’ படத்தின் பாடல்களுக்கு ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பாக்னானி இருவரும் ஜோடியாக ஆடி வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி பசுமை வழியில் நடந்த இந்த திருமணத்தில் பட்டாசு, ஒலிபெருக்கி ஆகியவைகள் பயன்படுத்தப்படவில்ல. அதுபோல், ‘ஆனந்த் கராஜ்’ என்ற சீக்கிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தங்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கோவாவில் மாற்றியதாக சொல்லப்படுகிறது.

சங்கீத் நிகழ்ச்சியின்போதே மணமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின்னரே ரகுல் ப்ரீத் சிங்கும் ஜாக்கி பாக்னானியும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதேசமயம் திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், சோனம் கபூர், அக்ஷய் குமார், பூமி பெட்னேக்கர், ரித்தேஷ் தேஷ்முக், டைகர் ஷெராப் உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் தற்போது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவருடைய காதலரான ஜாக்கி பாக்னானி தயாரிப்பில் ‘மியா ஃபோட்டோ மியான்’ என்ற படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் சோனா பிருத்திவிராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடம் ஏற்று நடித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்