விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இனி நான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார் பிரபல சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நட்சத்திர நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் நிகழ்ச்சியை சுவையுடனும் நகைச்சுவையுடனும் கொடுக்க முடியுமா என பார்வையாளர்களை வியக்க வைத்தது இந்நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் வெளியுலகத்திற்கு தெரிய வந்தனர். அதில் முக்கியமானவர் நடிகர் புகழ்.
நான்கு தொடர்களைக் கடந்த இந்நிகழ்ச்சியின் 5வது தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல சமையல் கலை நிபுணர்கள் ‘செப்’ தாமோதரன் மற்றும் ‘செப்’ வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
5வது தொடரிலும் இவர்கள்தான் நடுவர்கள் என செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “குக் வித் கோமாளி தொடர் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். பல லட்சம் மக்கள் பார்த்த இந்த நிகழ்ச்சியிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
“எனது மகிழ்ச்சியான மற்றொரு முகத்தை காண்பித்த இந்த நிகழ்ச்சிக்கும் 24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த தொலைக்காட்சிக்கும் நன்றி. அதே நேரத்தில் மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து உள்ளேன்.
“பலரின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க முடியாது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
“இதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வர உள்ள வித்தியாசமான வேறு ஒரு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கக் காத்திருக்கிறேன். அது என்ன என்பதை யூகித்துக்கொண்டே இருங்கள், நன்றி,’’ என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வெங்கடேஷ் பட்டின் இந்த முடிவு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி குழுவினருக்கும் அதன் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

