அன்பர் தினத்தன்று சிங்கப்பூரின் ‘கார்னிவல்’ திரையரங்குகளில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தைக் காண பல இளையர்களும் தங்கள் காதலர்களுடனோ நண்பர்களுடனோ சென்றிருந்தனர்.
இரு தலைமுறையினரின் காதல் கதைகளையும் காதல் பயணத்தில் எழக்கூடிய ஏற்ற இறக்கங்களையும் வெளிப்படுத்திய இத்திரைப்படம், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் ரசிகர்களின் மனதைப் பாதிக்கிறது.
திரைப்படத்தைக் காண திரண்ட ரசிகர்களின் மூலம் நடிகர் சூரியாவிற்கும் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் கடல்தாண்டி எத்தனை ரசிகர்கள் உள்ளனர் என்பதற்குச் சான்றாக இருந்தது.
முதன்முதலில் இத்திரைப்படம் வெளிவந்தபோதுகூட இவ்வளவு ஆரவாரம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
‘முன்தினம் பார்த்தேனே’, ‘அஞ்சல’ போன்ற பாடல்கள் திரையில் வந்ததும் இளையர்கள் பாடலின் உணர்வுகளோடு ஒன்றிப் போய், பாடவும் ஆடவும் செய்தனர்.
“சிங்கப்பூரில் இதுபோன்று எந்த தமிழ்த் திரைப்படமும் மறுவெளியீடு கண்டதில்லை. திரைப்படம் போலவே இல்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசைநிகழ்ச்சிபோல் இருந்தது.
“பாடல்களுக்கு அனைவரும் மனமுருகி ஆடினோம். இதுதான் நான் கொண்டாடிய தலைசிறந்த அன்பர் தினம்.” என்றார் அன்பர் தினத்தன்று இரவு 8 மணிக்கு ராணுவ முகாமிலிருந்து நேரடியாக திரைப்படத்தைக் காண சென்ற ஷேக் தாவுட், 22.
ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி, படம் முடிந்ததும் ‘அஞ்சல’ பாடலைக் ‘கார்னிவல்’ திரையரங்குகள் மீண்டும் திரையிட்டதைப் பாராட்டினார் ஷேக்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் முதன்முதலில் பார்த்த திரைப்படம் இதுதான். அதனால், எங்கள் மனதில் தனி இடம் வகித்துள்ளது. இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் நண்பர்களுடன் காண்பது நல்ல அனுபவமாக இருந்தது,” என்றார் அர்ஷத் அப்துல் ஜலீல், 23.
“இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்ட பெற்றோர் திறந்த மனப்பான்மையுடன் பிள்ளைகளுக்கு நண்பர்களாகவே இருந்தனர். அன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் முற்போக்கான திரைப்படம்,” என மெச்சினார் கமலக்கண்ணன் யாழினி, 18.
பார்ப்பவர் மனதைக் காதல் உணர்வில் மூழ்கச் செய்து, மெய்மறந்து பொழுதைக் கழிக்க வைத்த இத்திரைப்படம் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 11 மணிக்கு இறுதி முறையாக கார்னிவல் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது