இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிம்ரன் குப்தா தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க விரும்புகிறார்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் ‘வித்தைக்காரன்’ படத்தில் சிம்ரன்தான் கதாநாயகி.
தமது சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து 1,679 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சென்னை வந்திருப்பதாகக் கூறுபவர், தமிழ் சினிமாவில் நடிப்பதுதான் தமது லட்சியம் என்கிறார்.
விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு சிம்ரன் குப்தா குறித்து சில விஷயங்கள் தெரிந்திருக்கக்கூடும்.
விஜய் நாயகனாக நடித்த ‘சர்கார்’ படத்தில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சிம்ரன். அதன் பிறகு தமிழில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது ‘வித்தைக்காரன்’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
“சிறு வயது முதலே நடிகையாக வேண்டும், அதன் மூலம் பிரபலமடைய வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது.
“வீட்டில் ஆதரவு இருந்ததால் தயக்கமின்றி திரைப்பட வாய்ப்புகளைத் தேடினேன். இந்தியிலும் தெலுங்கிலும்தான் முதற்கட்ட வாய்ப்புகள் அமைந்தன. அதன் பிறகுதான் விஜய் படத்தில் நடனமாடினேன்.
“விஜய் மிக அடக்கமானவர். எல்லோருக்கும் மனித நேயத்துடன் உதவிகளைச் செய்கிறார். அவருடன் நடித்த பிறகு வாய்ப்புகள் தேடி வரும் எனக் காத்திருந்தேன். எனினும் என்னுடைய தேடலை நிறுத்தவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“இந்த விடாமுயற்சிதான் இப்போது நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது,” என்று சொல்லும் சிம்ரன் குப்தா, சவால்கள் இல்லாமல் சாதிக்க இயலாது என்கிறார்.
“நான் நடிக்கும் புதுப்படத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். ஆனால் அனைத்தையும் விருப்பத்தோடு செய்ததால் சிரமம் தெரியவில்லை.
“எனக்கான வசனங்களை மனப்பாடம் செய்த பிறகே கேமரா முன் நின்றேன்.
“மொழி தெரியாவிட்டால் வசனங்களைப் புரிந்துகொண்டு நடிக்க இயலாது.
“எனினும் பல காட்சிகளில் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்தேன். சவாலாகக் கருதியதால்தான் இதைச் சாதிக்க முடிந்தது. முடியாது என்பது எனது அகராதியிலேயே கிடையாது என சிறு வயதிலேயே அடிக்கடி கூறுவேனாம்.
“என்னைப் பொருத்தவரை சாத்தியமற்றது என்று கூறப்படுவதை சாத்தியமாக்க வேண்டும். அவ்வாறு செய்வது மிகவும் பிடிக்கும்,” என்கிறார் சிம்ரன் குப்தா.
‘வித்தைக்காரன்’ படத்தில் சதீஷுடன் இணைந்து நடித்ததில் திரைத்துறையைச் சார்ந்த பலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்கிறார்.
“எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும், ஏற்று நடிக்கத் தயார்,” என்று சொல்லும் சிம்ரன் குப்தா, நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் தாம் மிகவும் எளிமையான பெண் என்றும் அந்த எளிமைதான் இதுவரை எத்தகைய சர்ச்சைகளிலும் சிக்காமல் தம்மை வழிநடத்துவதாகவும் சொல்கிறார்.
“லட்சியத்திற்காக எதையும் விட்டுத்தர இயலாது. வாழ்க்கையில் சிரமப்படுபவர்களைப் பார்த்தால் உடனே இளகிவிடுவது என் இயல்பு.
“உண்மையைச் சொன்னால் எனது இந்த குணாதிசயங்கள்தான் எனது பலவீனங்கள்,” என்று சொல்லும் சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த்.
ஒருமுறையாவது அவருடன் நடித்துவிட வேண்டும் என்று சொல்லும் ஏராளமான நடிகைகளில் தானும் ஒருவர் என்கிறார்.
“நல்லது நடக்கும்போது துள்ளிக்குதிக்க மாட்டேன், அதேபோல் பிரச்சினை வரும்போது துவண்டுவிடவும் மாட்டேன். திரையுலகில் நுழைந்த பிறகு நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இவை.
“கடிகாரம் சரியில்லை என்றால் அப்படியே விட்டுவிடுவதில்லை. நேரத்தை திருத்தி ஓட வைக்க முயற்சி செய்வோம். இதைத்தான் நம் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும்,” எனத் தத்துவார்த்தமாகப் பேசுகிறார் சிம்ரன் குப்தா.
’வித்தைக்காரன்’ பட அனுபவம் குறித்து?
“இயக்குநர் வெங்கி என்னை நம்பி ஒப்படைத்த கதாபாத்திரம் இது. என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என, என்னைவிட அவர் அதிகமாக நம்பினார்.
“வித்தைக்காரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாவதற்கு முன்பு அவரை ஒருமுறைதான் நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால் சந்தித்த ஐந்தாவது நிமிடத்திலேயே, ‘நீதான் என் படத்தின் நாயகி’ என்று கூறினார்.
“அதைக் கேட்டதும் என் திறமை மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.
“நம்முடைய வேலைகளை ஒழுங்காகச் செய்தால்தான் எதிலும் வெற்றி காண முடியும். இதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்,” என்கிறார் சிம்ரன் குப்தா.