வேதிகா திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. எப்போதும் மாறுபட்ட கதைக்களங்களில் நடிப்பதில்தான் தாம் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கடந்த 2014ஆம் ஆண்டு தாம் நடித்த ‘காவியத் தலைவன்’ படத்தை மறக்கவே இயலாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தக் கதை, கதாபாத்திரமாக இருந்தாலும் அதிக எதிர்பார்ப்புகள் இன்றித்தான் ஒப்புக்கொள்கிறேன். தொடக்கத்திலேயே ஒரு படத்திற்காக அதிகம் யோசித்து மனம் குழம்ப மாட்டேன்.
“என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான படக்குழுவும் கதாபாத்திரமும் அமைந்தால் அதுவே போதும், தயக்கமின்றி அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வேன்.
“பெரும்பாலும் இப்படம் ஒத்துவரும், ஒத்துவராது என்பதை தொடக்கத்திலேயே என் மனம் உணர்த்திவிடும். இந்த நடைமுறையைத்தான் திரையுலகில் நடிக்கத் தொடங்கியது முதல் இன்று வரை பின்பற்றி வருகிறேன்.
தமிழில் தாம் நடித்த ‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’ ஆகிய இரு படங்களும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன என்றும் மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரை உலகங்களிலும் தமக்கு புதுவாய்ப்புகள் அமைந்தது என்றும் கூறுகிறார்.
“எனக்கு தென்னிந்திய மொழிகள் எதுவும் தெரியாது. சரளமாகப் பேச தடுமாறுவேன். அதேசமயம் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் தாக்குப்பிடித்து வருகிறேன். திரை உலகில் எனக்கான பணிகளை ஆர்வத்துடன் செய்து வருகிறேன் என்பதுதான் இதற்குக் காரணம்.
“தென்னிந்திய மொழிகளில் நடிக்கும்போது எனக்குரிய வசனங்களை ஓரிரு நாள்களுக்கு முன்பே இயக்குநரிடம் கேட்டுப் பெறுவேன். ஒருநாள் அவகாசம் கொடுத்தால்போதும், என்னால் அந்த வசனங்களை கச்சிதமாகவும் மொழி நடைக்கு பாதிப்பின்றியும் பேச முடியும்.
“என்னுள் இருக்கும் இந்தத் திறமைதான் தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு கை கொடுக்கிறது. வசனங்களை அவற்றுக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பேசி நடித்தால் சிக்கல் ஏற்படாது,” என்று சொல்லும் வேதிகா, தற்போது பிரபுதேவாவுடன் ‘பேட்டராப்’ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தாம் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு வேதிகா பின்னணிக் குரல் (டப்பிங்) கொடுப்பதில்லை. எனினும் பின்னணி குரல் கொடுக்கும் பணிகள் நடக்கும்போது இவரும் மறக்காமல் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு செல்வாராம்.
“நான் எவ்வாறு நடித்து வசனம் பேசியுள்ளேனோ, அதற்கேற்ப பின்னணி குரலிலும் அனைத்து உணர்ச்சிகளும் இருப்பதை உறுதி செய்வேன். அப்போதுதான் எனது உழைப்பு வீண் போகாது,” என்று சொல்லும் வேதிகா, நடனத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்.
எந்தப் படத்திலாவது நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவாராம். தமிழில் ராகவா லாரன்ஸ், சிலம்பரசன், கன்னடத்தில் சிவராஜ் குமார் ஆகிய கதாநாயகர்களுடன் பாடல் காட்சிகளில் நடனமாடியது நல்ல அனுபவமாக இருந்தது என்றும் இப்போது பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாட முந்தைய அனுபவங்கள் கைகொடுக்கின்றன என்றும் சொல்கிறார்.
“சவாலான, நடிப்புக்கு அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துகிறேன். இதுநாள்வரை என் மனதிற்கு பிடித்தமான பாத்திரங்களைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தேன். அதே சமயம் வணிக அம்சங்கள் நிறைந்த மசாலா படங்களில் நடிக்க வேண்டி இருக்கும். ரசிகர்கள் அவற்றையும் ஏற்று ஆதரவு அளிக்க வேண்டும்.
“வெகுஜனப் படங்கள்தான் எனது திரைப்பயணத்தை வகுத்து கொடுத்துள்ளன. அதே சமயம் ஒரே மாதிரியான கதை, கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன். இருபது ஆண்டுகால அனுபவம் மூலம் என் கதாபாத்திரத்தின் தன்மையை எளிதில் புரிந்து கொண்டு உள்வாங்க முடிகிறது.
“ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே ஒருவித பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களை நேசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் அதிகம் பேசுவதில்லை. மாறாக நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் எனது நடிப்பும் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் வேதிகா.

