பேச்சால் நம்பிக்கையூட்டும் ஹன்சிகா: கண்ணன்

பேச்சால் நம்பிக்கையூட்டும் ஹன்சிகா: கண்ணன்

2 mins read
fd5f8354-8a23-4b4e-93b5-99afdf705503
ஹன்சிகா. - படம்: ஊடகம்

ஹன்சிகா நாயகியாக நடிக்கும் புதுப்படம் ‘காந்தாரி’. ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது.

‘ஜெயம்கொண்டான்’ படத்தில் தொடங்கி, இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார் ஆர்.கண்ணன். ஆனால் இதுவரை திகில் கதையை இயக்கியதில்லையாம்.

இந்நிலையில், ஒரு நண்பரிடம் இருந்து ‘காந்தாரி’யின் கதை குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். அது பிடித்துப் போனதால், உடனடியாக அதைப் படமாக்கும் முயற்சியைத் தொடங்கி உள்ளார்.

“எப்போதும் ஒரு கதைக்கான ஆரம்பப்புள்ளி கிடைத்துவிடும். ஆனால் அதற்கான பின்னல்கள் சரிவர சேர்ந்துவர வேண்டும்.

“ரசிகர்கள் ஒரு கதைக்குள் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டபடியே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்ல வேண்டும்.

“இது வெறும் திகில் படம் மட்டுமல்ல. பல தரப்பட்ட உணர்வுகளைச் சேர்த்திருக்கிறோம். எனவே இதை மாறுபட்ட திகில் படம் என்று தயக்கமின்றி குறிப்பிடலாம்,” என்கிறார் இயக்குநர் கண்ணன்.

‘காந்தாரி’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தானாம். எனினும் எந்தவித சமரசத்திற்கும் உள்ளாகாமல் செயல்பட்டதாக கூறுகிறார்.

“கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் மிக முக்கிய அம்சம்,” என்று சொல்கிறார் கண்ணன்.

‘காந்தாரி’ என்ற பெயரே மாறுபட்டதாகவும் மிரட்டலாகவும் இருப்பதாக சிலர் தம்மிடம் கூறியதாகவும் இந்தக் கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைத்துவிடாது எனவும் குறிப்பிடுகிறார்.

“கடந்த 1940களில் நடக்கும் கதை இது. கதாநாயகி ஹன்சிகா இந்து சமய அறநிலையத் துறையில் வேலை பார்க்கிறார்.

“கந்தர்வக்கோட்ட என்கிற கோவிலில் நிறைய தங்கமும் வைரங்களும் இருப்பதும், அதைத் தேடி கண்டுபிடித்து அடைவதில் இருக்கும் மர்மங்களும்தான் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்தத் தேடல் முழுவதும் சுவாரசியமாக இருக்கும்,” என்கிறார் கண்ணன்.

இதில் தாம் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் திரையில் தோன்றுவதாகச் சொல்கிறார் ஹன்சிகா.

“அரசு ஊழியராகவும், ‘‘ஃபிளாஷ் பேக்’கில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடித்துள்ளேன். நரிக்குறவர் பெண்ணுக்குத்தான் காந்தாரி என்ற பெயர். எனது திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால் படம் இப்போதுதான் வெளியீடு காண்கிறது,” என்கிறார் ஹன்சிகா.

‘காந்தாரி’ படத்தின் கதையை நேரில் சென்று ஹன்சிகாவிடம் விவரித்துள்ளார் இயக்குநர் கண்ணன். அப்போது காந்தாரி கதாபாத்திரம் குறித்து விளக்கியபோது, ஹன்சிகா முகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கவனிக்க முடிந்ததாம்.

“சொன்னது அனைத்தையும் திரையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இதை அனுபவ ரீதியில் உணர்ந்திருப்பதாக இயக்குநர் அடிக்கடி சொல்வார். எனினும் அவர் சொன்னது அனைத்தையும் இப்படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்,” என்று பாராட்டுகிறார் ஹன்சிகா.

இப்படம் முழுவதும் வரக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் மறைந்த குணச்சித்திர நடிகர் மயில்சாமி.

“ஹன்சிகா எப்போதுமே நம்பிக்கையுடன் பேசக்கூடியவர். நல்ல வார்த்தைகளைக் குறிப்பிட்டு நம் மனதில் நம்பிக்கையை விதைப்பவர். அவரது வார்த்தைகளில் இருந்து எனக்கான உத்வேகம் கிடைக்கும்.

“மனதிற்குள் ஒரு கதை ஓடத் தொடங்கியதும் திடீரென ஒரு கற்பனை முகம் மனதில் பூக்கும். அப்படி இந்த கதையைப் பற்றி யோசித்தபோது என் நினைவில் நிழலாடியது ஹன்சிகாவின் முகம் தான்,” என்கிறார் இயக்குநர் கண்ணன்.

குறிப்புச் சொற்கள்