கறுப்பான தோற்றம் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரிக்கும் படமாக உருவாகி உள்ளது ‘தேரா கியா ஹோகா லவ்லி’ (‘Tera Kya Hoga Lovely’). இதில் இலியானா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கறுப்பாக இருப்பதால் இவரது மண வாழ்க்கையில் பிரச்சினைகள் எழுகின்றன. அவர் எவ்வாறு அனைத்தையும் சமாளிக்கிறார் என்பது நகைச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளதாம்.
“திருமணத்தில் எழும் பிரச்சினைகளையும் நகைச்சுவையாகத்தான் சொல்லி இருக்கிறோம். ஹரியானாதான் கதைக்களம். இதில் ரன்தீப் ஹூடா காவல்துறை அதிகாரி யாக வருகிறார். படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்கிறார் இயக்குநர் பல்விந்தர் சிங் ஜான்ஜுவா.
சமூகத்தில் பெண்கள் தற்போது எதிர்கொள்ளும் தீவிர பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் பலரது பாராட்டுகள் தேடி வருகின்றனவாம். சமூக ஊடகங் களில் பலரது ஆதரவு கிடைத்துள்ளதாம்.
“அதேசமயம், இந்தப் படத்தில் இலியானா நடித்தது தொடர்பாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். படம் நல்ல நோக்கத்தைப் பேசுவதாக இருந்தாலும், கறுப்பு நிறமுள்ள பெண் பாத்திரத்தில் இலியானாவுக்குப் பதில் இயற்கையாக கறுப்பு நிறமாக உள்ள பெண்ணை நடிக்க வைத்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
“அவ்வாறு செய்திருந்தால் கதாபாத்திர சித்திரிப்பு இன்னும் அதிக நம்பகத்தன்மையை அளித்திருக்கும். இலியானாவை செயற்கையாக கருமையாக்கி சித்திரித்து இருப்பதால், படத்தின் உண்மையான நோக்கம் நீர்த்துப்போகிறது,” என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
மார்ச் 8ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.

