தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விடுதலை 2’: எல்லாருக்குமான விடுதலை குறித்து விரிவாகப் பேசும் வெற்றிமாறன் படைப்பு

2 mins read
dfdaacc1-6ea1-471d-a1a9-48c4dbfc88d9
‘விடுதலை 2’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

விரைவில் திரைகாணும் என்று எதிர்பார்க்கப்படும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வரவேற்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படம் தொடர்பான அனுபவங்களையும் சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

இப்படத்துக்காக எட்டு நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில், நூறு நாள்களைக் கடந்தும் நடித்து வருவதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இயக்குநர் வெற்றிமாறன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். அதனால்தான் இந்தப் படம் இரண்டாம் பாகத்தை எட்டியுள்ளது.

“இதில் ‘பெருமாள் வாத்தியாராக’ அபாரத் திறமையோடு நடித்துள்ளார் சேதுபதி என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உற்சாகம் அளிக்கின்றன.

“படப்பிடிப்பும் இதர பணிகளும் நல்ல விதமாக நடந்து வருகின்றன. இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வது சரியல்ல.

“ஒவ்வொரு திரைப்படமும் அதற்கான சரியான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் நாமும் சில பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

“வாத்தியார் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, அவர் எப்படி வாத்தியாராக மாறினார், அவர் புரிந்துகொண்டது என்ன என்பதுதான் கதை.

“படம் பார்ப்பவர்களின் சந்தேகங்களுக்கும் படத்தில் பதில் இருக்கும். நான் விவரிப்பதைவிட படம் இன்னும் அதிகம் பேசும். ‘இதில் வாத்தியாரின் பெரும் பயணமும் இருக்கும். இக்கதாபாத்திரத்துக்கு எவ்வளவு தீனி போட்டாலும் போதாது. அப்படிப்பட்ட அருமையான, ஆழமான பாத்திரம் என்று வெற்றிமாறன் அடிக்கடி சொல்வார்.

“அது உண்மைதான். அதனால்தான் எட்டு நாள் மட்டுமே நடிக்கச்சென்ற நான், படப்பிடிப்பு நூறு நாள்களைக் கடந்தபிறகும் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்கிறேன்.

“படப்பிடிப்பு நடந்த சிறுமலைக் காடு என்னை முழுமையாக ஆக்கிரமித்தது. திகிலூட்டும் பாம்புகள் நிறைய இருக்கும் என்று கூறினர். எனக்கும் பயம் இருந்தது.

“ஆனால் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு, எனக்கு மீண்டும் அந்தக் காட்டைப் போய் பார்க்க மாட்டோமோ, அங்கே தங்க மாட்டோமோ என்ற ஏக்கம் அதிகமாகிவிட்டது.

“அந்தக் காடும் அதன் அமைதியும் அந்தச் சூழலும் உண்மையில் அவ்வளவு அழகு.

“எல்லோருக்குமான விடுதலையைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சமூகத்தை நேசிக்கும், சமூக நலனுக்காக யோசிக்கும் யாருக்கும் அன்பும் கோபமும் சரிவிகிதமாகத்தான் இருக்கும்.

“நாம் ஒவ்வொருவரும் நம்மை வெவ்வேறு விதமான அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கிறோம்.

“நம்பிக்கை, கற்பிதம் என அவற்றில் இருந்து நகர்ந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதுதான் இந்தப் படம்,” என்கிறார் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்