‘வணங்கான்’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமான மமிதா பைஜுவை அப்படத்தின் இயக்குநரான பாலா அடித்து துன்புறுத்தியதாக வெளியான தகவல் திரையுலக வட்டாரங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.
ஒரு தரப்பு பாலாவுக்கும், மற்றொரு தரப்பு மமிதாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன. சரி, என்னதான் நடந்தது என்று பார்ப்போம்.
பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்துக்குப் பூசை போட்ட நாள் முதல் இதுவரை ஏதாவது சிக்கல் எழுந்தபடி உள்ளது.
இந்தப் படத்தில் முதலில் சூர்யாவும் கிரித்தி ஷெட்டியும்தான் நாயகன், நாயகியாக ஒப்பந்தமாகினர். சில நாள்கள் கடந்த நிலையில், திடீரென சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கிரித்தி ஷெட்டியும் படக் குழுவிடம் மன்னிப்புக் கோரி, படத்திலிருந்து விலகினார்.
இதையடுத்தே, மலையாள நடிகையான மமிதாவை அணுகினர். தற்போது அருண் விஜய்யும் ரோஷினியும் இப்படத்துக்காக இணைந்துள்ளனர்.
அடுத்த ஓரிரு மாதங்களில் ‘வணங்கான்’ திரைகாணும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜு, இயக்குநர் பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதால்தான் படத்திலிருந்து விலகினாராம். இதை ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“எனக்கு அவ்வப்போது கோபம் வரும். அப்போது நான் கடுமையாகப் பேசுவதை மனதிற்கொள்ள வேண்டாம்,” என்று தொடக்கத்திலேயே இயக்குநர் பாலா கூறிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழகத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். இதில் எனக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை.
“ஆனால், கதைப்படி நான் இந்தக் கலையை அறிந்த பெண்ணைப் போல் நடிக்க வேண்டும். எனக்குப் பயிற்சி அளிக்க, இந்தக் கலையை அறிந்த ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார்.
“படப்பிடிப்பின்போது அப்பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினர். அவர் ஒருமுறை ஆடிக்காட்டிய உடனேயே, காட்சியைப் படமாக்கலாம் என்றார் பாலா.
“நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம், அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அதை நான் தெளிவாக கற்றுக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. நிறைய டேக்குகள் எடுத்தேன்,” என்கிறார் மமிதா.
அந்தக் காட்சியைப் படமாக்கி முடிப்பதற்குள் பலமுறை பாலாவிடம் திட்டு வாங்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில சமயங்களில் பாலா தனது தோள்பட்டையில் அடித்தார் என்றும் தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பாலா இப்படிச் செய்தது தவறு என ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ, நடிப்பை மெருகேற்ற வேண்டும் என்பதற்காகவே பாலா சற்று கடுமையாக நடந்து கொள்வார் என்கின்றனர்.
இந்நிலையில், மமிதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா தன்னை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ‘வணங்கான்’ படம் தொடர்பாக ஒரு பேட்டியில் சில விவரங் களைப் பகிர்ந்திருந்தேன். அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் எடுத்து பெரிய விவகாரமாக மாற்றி விட்டனர்.
“இயக்குநர் பாலா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல்களை முழுமையாக மறுக்கிறேன். அவரது இயக்கத்தில் ஏறக்குறைய ஓராண்டு நடித்துள்ளேன்.
“அவருடைய குழுவினர் என்னை நன் றாகவே கவனித்துக் கொண்டனர். மற்றவர் களுக்கு கொடுத்ததைவிட அதிகமான சுதந்திரத்தை தந்திருந்தார் பாலா.
“படத்திலிருந்து சூர்யா விலகியதால் நானும் விலக முடிவெடுத்தேன். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே இவ்வாறு முடிவெடுக்க நேரிட்டது,” என்று மமிதா கூறியுள்ளார்.

