தமிழ் சினிமாவில் நாள்தோறும் புது நடிகைகள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் நிலைத்து நின்று சாதிக்கிறார்கள் என்பது தனிக்கதை.
அதேசமயம் திறமை உள்ளவர்களைத் தமிழ் சினிமா அரவணைக்கத் தவறியதில்லை. அந்த வகையில் ‘லவ்வர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ள ஸ்ரீ கௌரி பிரியா தன்னால் சாதிக்க முடியும் என்று உறுதிபடச் சொல்கிறார்.
‘லவ்வர்’ படத்தில் அழகான, பொறுப்பான இளம்பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்த இவர், தமிழ் சினிமாவில் தம்மால் வெற்றிவலம் வர இயலும் என அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கௌரி பிரியா ஆந்திராவைச் சேர்ந்தவர். மின்னிலக்க சந்தை, தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மற்ற இளம் நாயகிகளைப் போலவே இவருக்கும் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டதாம்.
சிறு வயதில் நடிகர், நடிகையரின் முக பாவங்கள், உடைகளை அணியும் விதம், வசனங்களை உச்சரிக்கும் விதம் என அனைத்தையும் கூர்ந்து கவனிப்பாராம்.
“ஒரு வசனத்தைப் படமாக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் எத்தகைய முக பாவங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பேன். அதைவிட ஒரு வசனத்திற்கு எந்த நொடியில் நாம் உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்குறோம் என்பதிலும் என் கவனம் இருக்கும்.
“நாயகன், நாயகி மட்டும் அல்லாமல் திரையில் தோன்றும் அனைவரது நடிப்பையும் கவனிப்பதுதான் எனது சிறு வயது பொழுதுபோக்காக இருந்தது என்று சொல்லும் ஸ்ரீ கௌரி பிரியா, ’மிஸ் ஹைதராபாத்’ பட்டத்தை பெற்றுள்ளார்.
இவர் படித்த கல்லூரியில் அழகிப்போட்டிக்கான அறிவிப்புடன் சிறிய ‘ஸ்டால்’ ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாம். அழகிப்போட்டி என்றால் என்னவென்றே தெரியாத இவரும் சில தோழிகளுமாகச் சென்று தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“உண்மையில் விளையாட்டாகச் சென்று பெயர் கொடுத்தோமே தவிர, அழகிப் போட்டிக்காக எப்படி தயாராக வேண்டும், பட்டம் வெல்வது நமக்கு எந்த வகையில் உதவும் என்பதெல்லாம் எங்களுக்கு அறவே தெரியாது.
“போட்டி தொடங்கி இரண்டு சுற்றுக்கள் வரை சேட்டை செய்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.
“மூன்றாவது சுற்றில் இருந்து போட்டி கடுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் அரை இறுதிப் போட்டிக்கான பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதுதான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு மனதில் ஏற்பட்டது.
“அதன்பிறகு ஹைதராபாத் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்,” என்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா.
அப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று குறிப்பிடும் இவர், அழகிக்கான கிரீடம் அணிவிக்கப்பட்டபோது போட்டி அரங்கில் எழுந்த கைதட்டல்களும் வாழ்த்துகளும் இன்னும்கூட தன் காதில் கேட்பதாகச் சொல்கிறார்.
“இந்தப் போட்டிக்குப்பிறகு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. கொரோனா நெருக்கடி காலத்தில் ’மெயில்’ என்ற தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானேன். அன்று முதல் இன்று வரை ஓடிடி தளத்தில் அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
“எனக்குப் பிடித்தமான நடிகர், இயக்குநர் என்று ஓரிருவரின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்து திறமைசாலிகளுடனும் இணைந்து பணியாற்ற ஆசை. அப்போதுதான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
“ஒரு பெரிய விருந்தில் நமக்குப் பிடித்தமான ஒன்றிரண்டு உணவுகளை மட்டும் தேர்வு செய்து நமது எல்லையைக் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அந்த விருந்தில் உள்ள அனைத்துமே வேண்டும் என நினைக்க வேண்டும்.
“அதே சமயம் நல்ல கதைதான் ஒரு படத்தின் கதாநாயகன் என்பேன். ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் கதைக்குத்தான் அதிக பங்களிப்பு உள்ளது. எனவே நல்ல கதை, கதாபாத்திரங்களைக் கொடுக்கும் கலைஞர்கள் அனைவருடனும் நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா.
சினிமாவில் சாதிக்க மொழி ஒரு தடையல்ல என்றும் ஆர்வம் இருந்தால் எந்த மொழியிலும் சாதிக்க முடியும் என்றும் நம்புகிறாராம்.
தாய்மொழி தெலுங்கு என்பதால் அம்மொழியில் நடிப்பது சிரமமாக இருக்காது என்று சொல்லும் ஸ்ரீ கௌரி பிரியா, தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்காக சற்று மெனக்கெட்டால் போதும், ரசிகர்களைக் கவர்ந்துவிட முடியும் என்றும் கூறுகிறார்.
காதல், திருமணம் குறித்து தயக்கமின்றிப் பேசும் இவர், காதல்தான் இந்த உலகத்தை சுழல வைக்கிறது என்கிறார்.
உண்மையான காதலுக்கு நேரம், காலம் என எதுவும் தேவையில்லை என்றும் எத்தகைய தடையும் காதலுக்கு முட்டுக்கட்டை போட இயலாது என்றும் கூறுகிறார் ஸ்ரீ கௌரி பிரியா.
“அந்தக் காலம், இந்தக் காலம் என்றெல்லாம் காதலைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. எல்லா காலத்திலும் காதலுக்கு உள்ள முக்கியத்துவம் குறையவில்லை.
“அதை வெளிப்படுத்தும் தொழில்நுட்பமும் சில வழிமுறைகளும் மாறியுள்ளதே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
“ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதுடன் அவரவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் காதல் என்று சொல்லும் ஸ்ரீ கௌரி பிரியா, தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.
அந்த புதுப்பட வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களே அதிகாரபூர்வ அறிவுப்புகளை வெளியிட உள்ளன.
“அதே சமயம் ‘லவ்வர்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறேன். இன்று சிலர் என்னைத்தேடி வந்து கதைகளைச் சொல்லி படங்களில் நடிக்கக் கேட்டு முன்வருகிறார்கள் எனில், அதற்கு ‘லவ்வர்’ படத்தின் வெற்றிதான் காரணம். அதற்காக ஒட்டுமொத்த ‘லவ்வர்’ படக்குழுவுக்கும் எனது நன்றி,” என்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா.

