அண்மையில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளாவைவிட தமிழகத்தில் அதிக அளவு வசூலில் சாதனை படைத்து வருகிறது.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான இப்படம் கேரளாவைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனைப் படங்களில் ஒன்றாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை உலகளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை எட்ட உள்ளது.
இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது மஞ்சுமெல் பாய்ஸ்.
ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர்கள் குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்தப் படத்தின் கதைக்களமாகும்.
முன்பு கமல்ஹான் நடித்த குணா படத்தைத் தொடர்ந்து 23 ஆண்டுகள் கழித்து மற்றொரு படம் வெளியான நிலையில் குணா குகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், “தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் இதுபோன்று படம் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்,” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

