ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமன்னா

ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமன்னா

2 mins read
30c79436-acab-46e1-adb3-17356e4e40d4
காசியில் தமன்னா. - படம்: ஊடகம்

நெற்றியில் திருநீறு, கழுத்தில் மாலை சகிதமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த படங்களை வெளியிட்டு இருக்கிறார் தமன்னா.

நடிகை தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் மூலம் மீண்டும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் மகத்தான வெற்றிக்கு தமன்னாவின் ஆட்டமும் ஒரு காரணம் என்று சொல்லும் அளவிற்கு, கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போட்டிருந்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘அரண்மனை 4’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.

இப்படி மும்முரமாக நடித்து வரும் தமன்னா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் வெளியே செல்வதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது.

வலைத்தளத்தில் பரவிய வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளான தமன்னா, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். அதில், “நான் அவருடன் சேர்ந்து நடித்தால் அவர் மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால் அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்று விஜய் வர்மாவை காதலிப்பதை தமன்னா உறுதிப்படுத்தினார்.

தமன்னா எப்போது திருமணச் செய்தியை அறிவிப்பார் என்று அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அங்கு சிவனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வது, மற்றும் கழுத்தில் மாலையோடு வழிபாடு நடத்திய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படங்களைப் பார்த்த வலைத்தளவாசிகள் அம்மணிக்கு பக்தி முத்திவிட்டது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் இவரின் ஆன்மீக பயணத்துடன் இவருடைய புது படத்தின் படப்பிடிப்பும் காசியில் நேற்று தொடங்கியுள்ளது. கடந்த 2022ல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ‘ஒடேலா 2’ படத்தின் படப்பிடிப்பு காசியில் துவங்கி உள்ளது.

இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில், மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகும் பல மொழி திரைப்படமான ‘ஒடேலா 2’ ல் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து அவர் வலைத்தளத்தில், “எனது அற்புதமான ரசிகர்கள் அனைவருக்கும் உங்கள் அர்ப்பணிப்பும் உற்சாகமும் எனக்கு உந்து சக்தியாக உள்ளது.

“நீங்கள் அனைவரும் விரும்பும் திரைப்படங்களைத் தொடர்ந்து தருவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் அதிகமான அற்புதமான ஆண்டுகள், அன்பாகவும் மறக்க முடியாதவையாகவும் நிறையட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி