வில்லனாக பல படங்களில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தன்னுடைய குரலால் பலரையும் கவர்ந்து தற்பொழுது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
ரகுவரனுக்குப் பிறகு, குரல் மூலம் ஒரு நடிகர் ஆச்சரியப்படுத்துகிறார் என்றால் அவர் அர்ஜுன் தாஸ்.
வில்லன் நடிகராக அறிமுகமாகி, வளர்ந்து வரும் நாயகனாக மாறி நிற்கும் அர்ஜுன் தாஸின் கைவசம் பல படங்கள் இருக்கின்றன.
அவரை தொடர்பு கொண்டபோது, கேட்ட கேள்விகளுக்கு அருமையாக பதிலளித்தார்.
அண்மையில் வெளியான போர் படத்தில் கல்லூரி மாணவர்களில் மிகவும் சேட்டை செய்யும் மாணவராக நடித்திருந்தீர்கள். உண்மையில் நீங்கள் அப்படித்தானா? அந்தப் படத்தில் நடித்தபோது உங்கள் கல்லூரி காலங்கள் நினைவிற்கு வந்ததா?
“பிஜாய் நம்பியார் இயக்கத்தில் `போர்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தேன். அந்த நாள்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. ஆனால் நான் இந்தப் படத்தில் நடித்துபோல் என்னுடைய கல்லூரி நாள்கள் இல்லை. கல்லூரி சென்றால் படிப்பு. பின்னர் வீடு திரும்புவது என்றுதான் இருந்தேன்.
“சில நேரங்களில் அம்மா, அப்பா வந்து என்னைக் கல்லூரியில் விட்டுட்டுச் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் எவ்வளவு நல்ல பையன் என்று. ஆனால் நான் போர் படத்தில் நடித்த பிரபு கதாபாத்திரத்தில் செம சேட்டை செய்யும் மாணவனாக நடித்திருந்தேன்.
இந்திப் படத்தின் அனுபவம்?
தொடர்புடைய செய்திகள்
போர் படம் இந்தியில் எடுத்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இயக்குநர் மதுமிதா, ஒளிப்பதிவாளர் மெய் என்று என்னைச் சுற்றிப் பெரும்பாலும் தமிழ் நபர்கள்தான். அதனால் எனக்கு இந்திப் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்ற உணர்வே இல்லை. இதனுடைய இந்திப் பதிப்பில் ஹர்ஷவர்தன் ரானேவும் இஹான் பட்டும் நடித்திருந்தார்கள்.
“நான் தமிழில் நடித்த வேடத்தில் இந்தியில் ஹர்ஷவர்தன் நடித்திருக்கிறார். அவரிடம் `நீங்கள் இந்தக் காட்சியை எப்படி அணுகப்போறீங்க?’ என்று கேட்டு அதிலிருந்து வேறுபட்டு நடித்தது வித்தியாசமாக இருந்தது. நான் இந்தி நல்லாவே பேசுவேன். அதனால, எனக்கு மொழிப் பிரச்சினை இல்லை.
மலையாளத்தில் அறிமுகமாகப்போறீங்க. அந்தப் படத்தைப் பற்றி சொல்லுங்கள்.
``ஆமாம். `ஜூன்’, `மதுரம்’, `கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ படங்களை இயக்கிய அஹமத் கபீர்தான் மலையாளப் படத்தையும் இயக்குகிறார். `ஹ்ருதயம்’ படத்துடைய இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இப்படியான சூப்பர் குழுவோடு மலையாளத்தில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. முழுக்க முழுக்க காதல் கதை.’’
இந்தி, மலையாளம் அடுத்து தெலுங்கில் பவன் கல்யாண்கூட நடிக்கிறீங்க, தமிழில் நாலு படங்கள் கைவசம் இருக்கு. எப்படி வேலை செய்றீங்க?
``தெலுங்கில் `OG’ படத்தில் பவன் கல்யாண்கூட நடித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் `ரசவாதி’ படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
“சில நேரங்களில் சில மனிதர்கள்’ இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் தற்பொழுது நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் படப்பிடிப்புதான். அதனால்தான், இப்போது நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகத் தயாராக இருக்கின்றன.
ராஜு முருகன் இயக்கத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?
“ஆமாம். ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநரான ராஜூ முருகன் ‘ஜப்பான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு நல்ல கதை ஒன்றை தயார் செய்துள்ளார். அதில் நான் நடிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார். நானும் நடிக்க சம்மதித்துள்ளேன்.
வில்லனாக ஆரம்பித்த நீங்கள் நாயகனாகிவிட்டீர்கள். அதுபற்றி கூறுங்கள்.
``நல்ல குழுவுடன் சேர்ந்து நல்ல கதை, நல்ல படமாக வெளிவந்து, அது மக்களுக்குப் பிடித்தது என்றால் அவ்வளவுதான். சூப்பர்.
“என்னை வில்லனாக பார்த்தார்கள். பிறகு இயக்குநர் ஹலிதா ஷமீம்தான் `புத்தம்புது காலை விடியாதா’ தொடரில் அவங்க இயக்கின `லோனர்ஸ்’ கதையில் என்னை நடிக்க வைத்தார்கள்.
“அப்புறம், வசந்தபாலன் இயக்கத்தில் `அநீதி’. பின்னர் பிஜாய் இயக்கிய கூட `போர்’, சாந்தகுமார் இயக்கிய `ரசவாதி’ன்னு பல நல்ல இயக்குநர்களிடம் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
“நாம் செய்யும் வேலையை 200 விழுக்காடு உண்மையாக செய்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் உழைக்கிறேன்.
“தொடர்ந்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்பி வாய்ப்பு கொடுக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி,” என்றார் வித்தியாசமான குரல் வளம் கொண்ட அர்ஜுன் தாஸ்.

