‘துபாயில் சொந்த வீடு வாங்கியுள்ளார், சென்னை கார் பந்தயத்தில் தொடர்புள்ளது’ எனத் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கும் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
“துபாயில் சொந்தமாக வீடு எதுவும் இல்லை. இன்னும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். அதேபோல், சென்னை கார் பந்தயம் குறித்தும் எனக்கு ஒன்றும் தெரியாது,” என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
‘ஒருநாள் கூத்து’, ‘டிக் டிக் டிக்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
மதுரையில் பிறந்த நிவேதா, தனது இளம் வயதிலேயே துபாய்க்கு குடிபெயர்ந்து தனது பட்டப் படிப்பை எடின்பெர்க் நகரில் முடித்தார்.
சினிமாவைத் தாண்டி விளையாட்டிலும் கார் பந்தயத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் பூப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் ரூ.50 கோடி செலவில் சொகுசு பங்களா வாங்கிக் கொடுத்துள்ளதாக கடந்த சில நாள்களாக யூடியூப் ஒளிவழியில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கப் பதிவில் விளக்கம் அளித்துள்ள நிவேதா, “அண்மைக்காலமாக அரசியல்வாதி ஒருவர் எனக்காகப் பணத்தை தண்ணீராய்ச் செலவழித்து வருவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன.
“ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பதற்கு முன்பாக, வீணாகப் பரப்பப்படும் செய்தியின் உண்மைத் தன்மையை மனிதாபிமானத்துடன் சரிபார்ப்பார்கள் என நினைத்து இவ்வளவு காலமாக அமைதியாக இருந்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த சில நாள்களாகப் பரவி வரும் பொய்ச்செய்தியால், நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம்.
“இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதற்கு முன் யோசியுங்கள்.
“நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ்ந்து வருகிறேன்.
“2002 முதல் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம்.
“திரைவாழ்க்கையில்கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, நாயகனிடமோ பட வாய்ப்புகள் தரும்படி போய் நின்றது கிடையாது.
“நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். அவையெல்லாம் என்னைத் தேடி வந்த வாய்ப்புகள்தான்.
“நான் ஒருபோதும் பணத்துக்காகவோ, வேலைக்காகவோ பேராசைப் பட்டது இல்லை.
“2013ஆம் ஆண்டிலிருந்து எனது விருப்பப்படி கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறேன். அதிலும் சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.
“என்னைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட எந்தத் தகவலிலும் உண்மை இல்லை,” என உறுதிபடக் கூறியுள்ளார்.
தான் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகுதான் இப்போது ஒரு நல்ல இடத்தில் இருப்பதாகவும் கூறும் நிவேதா, உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களைப் போலவே நானும் தொடர்ந்து கண்ணியமான, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்கிறார்.
“இந்தப் பிரச்சினையை நான் சட்டரீதியாகக் கையாள விரும்பவில்லை.
“ஏனெனில், பத்திரிக்கைத் துறையில் இன்னும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது இதுபோன்ற அவதூறு பரப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

