தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெற்றது.
விழாவில் ‘தனி ஒருவன்’ படத்துக்குச் சிறந்த படத்துக்கான முதல் பரிசும் ‘இறுதிச்சுற்று’படத்தில் நடித்திருந்த மாதவனுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்திருந்த ஜோதிகாவுக்குச் சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த படம்: முதல் பரிசு- ‘தனி ஒருவன்’, 2வது பரிசு- ‘பசங்க-2’, 3வது பரிசு- ‘பிரபா’, சிறப்புப் பரிசு- ‘இறுதிச்சுற்று’, பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) - ‘36 வயதினிலே’.
சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு- கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்புப் பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),
சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கௌதமி (பாபநாசம்), சிறந்த இயக்குநர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணிப் பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணிப் பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).
அத்துடன், சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சண்டைப் பயிற்சியாளர், நடன ஆசிரியர், ஒப்பனைக் கலைஞர், தையல் கலைஞர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலையும் அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுக்கு மாதவன் நன்றி
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த ‘இறுதிச் சுற்று’ படம் சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு, சிறந்த நடிகருக்கான பரிசு, சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு, சிறந்த இயக்குநருக்கான பரிசு, சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான பரிசு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான பரிசை வென்ற நடிகர் மாதவன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கௌரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிபெற்ற சக வெற்றியாளர்களான சுதா, ஜோதிகா, ரித்திகா, கௌதம் கார்த்திக், அரவிந்த்சுவாமி, ஜிப்ரான் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

