‘லால் சலாம்’ திரைப்படத்தின் தோல்விக்கு கடைசி இரண்டு நாட்களில் தான் செய்த இறுதிக்கட்டப் பணிகளே காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாகக் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மகளை நம்பி தனது கால்சீட்டை ரஜினிகாந்த் ஒதுக்கி கொடுத்த நிலையில், விஷ்ணு விஷால், விக்ரகாந்த் போன்ற நடிகர்களை நாயகர்களாக வைத்து செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘லால் சலாம்’ திரைப்படம் உருவானது.
ரஜினிகாந்தும் இந்தப் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
தனுஷின் ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநராக ‘லால் சலாம்’ படத்தின் மூலம் வெற்றிப் படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பா ரஜினிகாந்தை மொய்தின் பாயாக நடிக்க வைத்து மோசம் செய்ததுதான் மிச்சம் என்கின்றனர் ரசிகர்கள்.
தேசிய விருது வாங்கப் போகிற கதை, உண்மை சம்பவம் என்றெல்லாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ஆனால், படத்தைப் பார்த்த யாருக்கும் அந்த ஓர் உணர்வு வரவே இல்லை என்பதுதான் படத்தின் தோல்விக்கான காரணம் என பலரும் கூறினர்.
தன்னுடைய கதையில் இடைவேளைக்கு பிறகுதான் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வருவதாக இருந்தது. ஆனால், வியாபாரத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதலிலேயே காட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் கடைசி இரண்டு நாட்களில் இறுதிக்கட்டப் பணிகளில் மொய்தீன் பாய் காட்சிகளை கொஞ்சம் முன்னாடி கொண்டுவந்ததுதான் இந்தப் படத்தில் நான் செய்த பெரிய தவறு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தான் இயக்க விரும்பிய ‘லால் சலாம்’ படத்தில் செந்தில் கதாபாத்திரம்தான் கதையின் நாயகனாக இருந்தது. ஆனால், எப்போது அந்த படத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளே நுழைந்தாரோ, அதன் பிறகு ரசிகர்கள் கதையை விட்டுவிட்டு மொய்தீன் பாயை பார்க்கத் தொடங்கியதும் ரசிக்கத் தொடங்கியதும்தான் இந்தப் படம் தோல்வி அடைய காரணம் எனக் கூறியுள்ளார்.
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நாம் நடித்தால் படம் நன்றாக வரும் என ஆசைப்பட்டு உள்ளே வந்த ரஜினிகாந்த் அந்த படம் தோல்வியடைய காரணமாக மாறிவிட்டார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களையே கொந்தளிக்கச் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
படத்தை இயக்கத் தெரியாமல் தவறு செய்தது தான்தான் என கடைசி வரை ஒத்துக் கொள்ள மறுக்கிறாரே ஐஸ்வர்யா என வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

