ஷாருக்கான் ராம் சரணை ‘இட்லி வடை சாம்பார்’ என அழைத்த விவகாரம்

ஷாருக்கான் ராம் சரணை ‘இட்லி வடை சாம்பார்’ என அழைத்த விவகாரம்

2 mins read
8f3858a0-5750-4774-a009-0cc3230a2e9e
அம்பானி வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய முன்னணி நடிகர்கள். - படம்: ஊடகம்

அம்பானி வீட்டு திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான், நடிகர் ராம் சரணை, “இட்லி, வடை, சாம்பார் ராம் சரண் மேடை வரவேண்டும்,” என்று அழைத்த விதம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை மிகப்பிரம்மாண்டமாக குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடனமாடினர். அப்போது அவர்களுக்கு அந்த பாடலுக்கு சரியாக நடனம் ஆடத் தெரியாததால், ஷாருக்கான் “இட்லி, வடை, சாம்பார் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? மேடைக்கு வாருங்கள்,” என்று ராம் சரணை அழைத்திருக்கிறார்.

இந்நிலையில் ராம் சரணின் ஒப்பனை கலைஞர் ஜெப ஹாசன் என்பவர் “நான் ஷாருக்கானின் ரசிகன்தான். ஆனால் அவர் ராம் சரணை ‘இட்லி, வடை, சாம்பார்’ என்று மேடையில் அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. இது அவமரியாதையான செயல். இதனால் சிறிது நேரம் கழித்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன்,” என்று பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்தியர்களை கேலி செய்யும் வகையில்தான் ஷாருக்கான் அவ்வாறு ராம் சரணை அழைத்திருக்கிறார் என்று ராம் சரணின் ரசிகர்கள் பலர் ஷாருக்கானிற்கு எதிராகவும் அவர் நகைச்சுவைக்காகத்தான் அப்படி பேசியிருக்கிறார் அதில் தவறு ஏதும் இல்லை என்று சிலர் ஷாருக்கானிற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஷாருக்கான் இதுபற்றி எதுவும் பதிலளிக்காதது ராம் சரணின் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி