மிக்ஜாம் புயலின்போது தொண்டாற்றிய மன்ற நிர்வாகிகள், ரசிகர்களிடம் குடும்பத்தையும் கவனியுங்கள் என்று அறிவுரை கூறி இருக்கிறார் நடிகர் சூர்யா.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி எனப் பல மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யாவின் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் பலர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
அவர்களை சென்னைக்கு அழைத்து விருந்து வைத்து கௌரவித்திருக்கிறார் சூர்யா. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வந்திருந்த அனைவருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய சூர்யா, மதிய உணவும் பரிமாறினார்.
பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தவர், புதிதாகத் திருமணமானவர்கள், “வேலை வேலை என்று பணம் சம்பாதிக்க ஓடுபவர்கள், குடும்பத்தையும் மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்யவேண்டும்.
“பெண்கள் வீட்டில் பொறுப்பாக நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதுடன், குழந்தைகளையும் பொறுப்போடு வளர்க்கிறார்கள். எனவே வீட்டிற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்,” என்று பேசியது அங்கு வந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

