தனுஷ் நடிக்கவுள்ள 54வது படத்தை ‘மஞ்சும்மல்பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
’குணா’ குகையில் நடக்கும் கதையும் இளையராஜா இசையமைத்த ‘கண்மணி அன்போடு’ பாடலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர்.
இந்நிலையில், தனுஷ் நடிக்கவுள்ள 54வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் - சிதம்பரம் சந்திப்பின்போது இதுகுறித்து பேசப்பட்டது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

