அடிபடாமல் தப்பித்தது பெரிய விஷயம்: ஸ்ம்ருதி

அடிபடாமல் தப்பித்தது பெரிய விஷயம்: ஸ்ம்ருதி

2 mins read
975532cf-e2a3-4224-a076-52faf356a3da
ஸ்ம்ருதி. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் தரமான படைப்புகள் உருவாகி வருவதாகச் சொல்கிறார் ஸ்ம்ருதி வெங்கட். தற்போது ’டபுள் டக்கர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை அப்பாவியான, வெகுளித்தனமான கதாபாத்திரங்களில் தான் நடித்திருப்பதாகவும் இந்தப் புதுப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்துள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம். குறிப்பிட்ட காட்சியில் சிறிய வேன் ஒன்றை ஓட்ட வேண்டும் என ‘டபுள்டக்கர்’ இயக்குநர் கூறியுள்ளார். அந்த வாகனத்தில் இவரைத்தவிர படநாயகன் தீரஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் இருப்பர்.

“வில்லன் கூட்டம் எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தோடு துரத்தும். அவர்களிடம் இருந்து தப்பிக்க படாதபாடு படுவோம்.

“இந்தக் காட்சியில் அடிபடாமல் நடிப்பதே பெரிய சவால் என்ற நிலையில் நான் எதிர்கொண்ட மற்றொரு சவால் குறித்து இயக்குநருக்கு மட்டுமே தெரியும். உண்மையில் எனக்கு கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் ஓட்டத் தெரியாது என்பதுதான் அது.

“குண்டர்கள் கூட்டம் ஆயுதங்களுடன் துரத்தி வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டன. எங்களது வாகனத்தின் இருபுறமும் சிலர் வாகனத்தின் முன்பாகவும் எங்களை சூழ்ந்திருப்பர்.

“இந்தக்காட்சியில் எனக்குரிய வசனங்களை பேசுவதுடன் அருகே இருப்பவர்கள் பேசுவதற்கு ஏற்ப முகபாவனங்களையும் வெளிப்படுத்த வேண்டும். போதாத குறைக்கு இருசக்கர வாகனத்தில் துரத்தும் ஸ்டண்ட் கலைஞர்கள் மீது மோதாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“எப்படியோ யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் அந்தக் காட்சிகள் கச்சிதமாக படமாக்கப்பட்டன. எனது துணிச்சலையும் ஈடுபாட்டையும் இயக்குநர் வெகுவாகப் பாராட்டினார். அதன்பிறகு தான் நான் எத்தகைய சூழலில் அவ்வாறு நடித்தேன் என்பது படக்குழுவினருக்கு தெரிய வந்தது,” என்கிறார் ஸ்ம்ருதி வெங்கட்.

இப்படத்தின் நாயகன் தீரஜ்ஜுக்கு இரு வேடங்களாம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளும் ஸ்மிருத்திக்கு சவாலாக இருந்தனவாம்.

“நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்காட்சிகள் படமாக்கப்பட்டன. ஓரே சமயத்தில் அவ்விரு கதாபாத்திரங்களுடன் நடிக்க வேண்டி இருந்தது.

“அப்போது யாருடன் எந்த வசனத்தை பேசினேன் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும், இருவரிடமும் வெவ்வேறு சூழலில் பேசுவதுடன் எனது உடல் மொழியும் சரியாக இருக்க வேண்டும். யாரிடம் எத்தகைய முகபாவங்களை வெளிப்படுத்துகிறேன் என்பதிலும் கவனம் தேவை என்றார் இயக்குநர்.

“சில சமயங்களில் நான் தவறு செய்தாலும் இயக்குநர் கோபிக்க மாட்டார். படக்குழுவினரும் ஏதேனும் கிண்டலாக, நகைச்சுவையாகப் பேசி உற்சாகப்படுத்துவர். அதனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.

“முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோருடன் கோவை சரளாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூத்த கலைஞர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

“இதற்கு முன்பு ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த எனக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தனர். இப்போது மேலும் ஒரு மாறுபட்ட கதைக்களம், பாத்திரத்துடன் ரசிகர்களை சந்திக்கிறேன். இதுவும் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்,” என்கிறார் ஸ்ம்ருதி.

குறிப்புச் சொற்கள்