‘பேரன்பும் பெருங்கோபமும்’: குற்றத்தைக் களைய நினைக்கும் ஒரு சமூக விரோதியின் கதை

‘பேரன்பும் பெருங்கோபமும்’: குற்றத்தைக் களைய நினைக்கும் ஒரு சமூக விரோதியின் கதை

2 mins read
957fa77d-a35e-4be7-89ec-0098b29d04bd
‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

குற்றத்தைக் களைய நினைக்கும் ஒரு சமூக விரோதியின் கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

தமக்கு எழுத்து, சினிமா ஆகிய எல்லாமே ஒன்றுதான் என்று குறிப்பிடும் இவர், தாம் சொல்வது, செய்வது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம். தாம் இயக்கும் முதல்படம் அப்படிப்பட்ட உண்மையான படைப்பாக இருக்கும் என்கிறார்.

“எனது தயாரிப்புத் தரப்பு சமூகத்தின் எளிய மனிதர்களுடைய வாழ்க்கையைக் காட்சிப்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அதற்கு ஏற்ப எதிர்பார்ப்புகளும் வருத்தங்களும் இல்லாமல் வாழும் எளிய மக்கள்தான் எனது ரசிகர்களாக இருக்க முடியும்.

“என்னுடைய எழுத்து, சினிமா, அரசியல் ஆகிய அனைத்துமே அவர்களை மையப்படுத்தித்தான் உள்ளது,” என்கிறார் சிவபிரகாஷ்.

இந்தப் படத்தில் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக நடித்துள்ளார்.

தனது கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் எனக் கருதியதாகவும் அது மிகச் சரியான கணிப்பாக அமைந்து விட்டதாகவும் சொல்கிறார் சிவபிரகாஷ்.

கதிர் எழுதிய ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிஜ மனிதர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர்கள் என்னிடம் தெரிவித்த உண்மைகள் என் மனதின் சமநிலையைக் குலைக்கும் அளவுக்கு இருந்தன.

“இந்த அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனது படத்திற்கான கதையை எழுதி இருக்கிறேன்.

“இருவேறு சாதிகளில் இருந்து திருமணம் செய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும் பல்வேறு திருப்பங் களோடு என் படத்தில் கையாளப்பட்டுள்ளன.

“இதற்காக என்னை அதிக துணிச்சல் மிக்கவன் என்று குறிப்பிட வேண்டியதில்லை. முதல் படத்திலேயே ஆழமான கருத்துகளை முன்வைப்பதால் மாற்றங்கள் வந்துவிடுமா என்று தெரியாது.

“ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியவரும்.

“இது மண்ணின் கதை மட்டுமல்ல. மனிதர்களின் கதையும்கூட,” என்று உணர்வுபூர்வமாக பேசுகிறார் சிவபிரகாஷ்.

பட நாயகன் விஜித் பச்சான் மூன்று வெவ்வேறு தோற்றங் களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்ப தனது உடற்கட்டை மாற்றி அமைத்து அருமையாக நடித்திருப்பதாக பாராட்டுகிறார் இயக்குநர்.

“கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். திராவிட முகங்களோடு நாயகனும் நாயகியும் கிடைத்தது அழகான விஷயம். படத்தில் பணியாற்றிய அனைவருமே நிறைவாக பங்களித்துள்ளனர்.

“இளையராஜா இசையமைத்துள்ளார். இதுபோன்ற உணர்வுகள் நிறைந்த படைப்புகளுக்கு உயிரூட்ட வேறு யாரால் முடியும்?

“இளையராஜாவைப் பார்ப்பதும் அவருடன் பணியாற்றுவதும் அவரது இசையைக் கேட்பதும் பரவசம் தரக்கூடியவை,” என்கிறார் அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ்.

குறிப்புச் சொற்கள்