சாதி அரசியலைப் பற்றி பேசும் படம் ‘எலக்சன்’

3 mins read
667475fb-8135-4933-988d-b934faf23a3d
ப்ரீத்தி அஸ்ராணி. - படம்: ஊடகம்

காதலுக்குள் நிகழும் சாதி அரசியலைப் பற்றி பேசும் படமாக உருவாகிறது ‘எலக்சன்’ திரைப்படம். இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சேத்துமான்’ படத்தை இயக்கி தமிழ்த் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தற்போது ‘உறியடி’ படநாயகன் விஜய்குமாருடன் இணைந்து ‘எலக்சன்’ படத்தை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்தான் கதைக்களமாம்.

இதில் அரசியல் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பியுள்ளார் தமிழ். இதையடுத்து நாயகன் விஜய்குமாரை அணுகி கதை சொல்ல, அதைக் கேட்ட அவர் உடனடியாக நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார். மேலும், தயாரிப்பாளரையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

“நான் சொன்ன கதையில் தனக்குப் பிடித்தமான அம்சங்களை வரிசையாகக் குறிப்பிட்டு நடிப்பதை அவர் உறுதி செய்தபோது உற்சாகமாக இருந்தது.

“அவர் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் அமெரிக்காவில் கூகல் நிறுவனத்தில் பணியாற்றுபவர். உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி உருவாகும் படம் அவரைப் போன்ற ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவரும் கதை பிடித்திருப்பதாக சொன்னதும் பட வேலைகளை உடனே தொடங்கி விட்டோம்,” என்கிறார் இயக்குநர் தமிழ்.

இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். அவர்களில் ‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணி ஒருவர். ‘அயோத்தி’ படத்தில் தனது பங்கை நிறைவாக தந்தவர் ப்ரீத்தி. அதில் அவரது நடிப்பு பாங்காக இருந்ததாக பாராட்டுகிறார் தமிழ்.

ப்ரீத்தியைப் பொறுத்தவரை நல்ல கதை அம்சம் இருந்தால் உடனே நடிக்க சம்மதிக்கிறார்.

“வேலூர் மாவட்டத்தில், குறிப்பாக ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நடக்கும் கதை இது. அந்த ஊருக்கான வட்டார வழக்கில் வசனங்களைப் பேச வேண்டும் என்று இயக்குநர் தொடக்கத்திலேயே கூறிவிட்டார். அழகிய பெரியவன் எழுதிய வசனங்களை நன்கு உள்வாங்கி நடித்தேன்,” என்கிறார் ப்ரீத்தி.

கதாநாயகன் விஜய்குமார், நடராசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

கதைப்படி, நன்றாக படித்து வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் துடிப்பான இளையரான இவர், மற்றொரு பக்கம் தீவிர அரசியல் ஆர்வத்துடன் செயல்படுவாராம்.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்.

“மற்ற தேர்தல்களைவிட உள்ளாட்சித் தேர்தலில்தான் பகை, பழிவாங்கல், குரோதம் நிறைந்திருக்கும். தேர்தலில் தோல்வியுற்றதால் ஏற்பட்ட குரோதம் காரணமாக பழிவாங்கும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தது குறித்து பல செய்திகளை கேள்விப்பட்டு இருக்கிறோம்.

“அவை குறித்தெல்லாம் இந்தப் படம் விரிவாகப் பேசும். உணவு அரசியல் குறித்து எனது முதல் படத்தில் பேசி இருந்தேன். இப்போது தேர்தல் குறித்து எனது அடுத்த படம் பேசும்.

“எனக்குத் தெரிந்த வரையில் இதற்கு முன்பு ‘களவாணி 2’, ‘மண்டேலா’ ஆகிய இரு படங்கள்தான் தமிழக உள்ளாட்சித் தேர்தலை களமாகக் கொண்டு உருவான படங்கள்.

“உண்மையில் அவ்விரு படங்கள் வெளியாவதற்கு முன்பே ‘எலக்சன்’ படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். தயக்கம் காரணமாக யாரிடமும் இது குறித்து பேசவில்லை.

“உள்ளாட்சித் தேர்தல் எவ்வாறு நடக்கும், மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கும் யதார்த்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லி இருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் தமிழ்.

குறிப்புச் சொற்கள்