‘மங்கை’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ‘கயல்’ ஆனந்தி. பாலின பேதம் பார்க்காமல் ஆண், பெண், திருநங்கை என அனைவருமே சமம் எனும் கருப்பொருளுடன் உருவாகிறது இப்படம். குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார்.
ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த உற்சாகத்தில் படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர்.
பருவ மாற்றம் வரும்போது ஆண், பெண் என இரு பாலினத்தவர்களிடமும் ஒருவித இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்பு. அத்தகைய பருவ வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் பார்க்க வேண்டிய படமாக உருவாகிறது ‘மங்கை’.
இந்தப் படத்தின் நாயகி ‘கயல்’ ஆனந்தியின் நடிப்பு ரசிகர்களால் நிச்சயம் பாராட்டப்படும் என்கிறார் குபேந்திரன் காமாட்சி.
“இது எனக்காக எழுதப்பட்ட கதைபோல் அமைந்துவிட்டது என்று இயக்குநர் என்னிடம் கூறினார். அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது என்பதை விவரிக்கவில்லை.
“தொடக்கத்தில் ஒரு புதுமுகம் அமைந்தால் அதுவே போதுமானதாக இருக்கும் எனக் கருதினாராம். எனினும், படத்தின் தயாரிப்பாளரிடம் கதையை விவரித்தபோது அவர்தான் என்னை ஒப்பந்தம் செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கினாராம்.
“கதையை முழுமையாகக் கேட்டு முடிக்கும் முன்பே எனக்குப் பிடித்துப்போனது. அந்த அளவுக்கு நேர்த்தியாக திரைக்கதை அமைத்துள்ளார் குபேந்திரன்,” என்று பாராட்டுகிறார் ஆனந்தி.
இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் இதுபோன்ற படங்களுக்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘மங்கை’ எத்தகைய கருத்துகளை வலியுறுத்தும் என்ற கேள்விக்கு இயக்குநர் குபேந்திரன் காமாட்சி விரிவாகப் பதில் அளித்துள்ளார்.
“நம்முடைய சமூகத்தில் பல்வேறு அம்சங்கள் தொடர்பான புரிதல் போதுமானதாக இல்லை எனத் தோன்றுகிறது. இளம் பெண்கள் என்றாலே ஆண்களை ஏமாற்றிப் பணம் கறப்பார்கள் என்று சிலர் கருதுகிறார்கள்.
“இளம் பெண்களை போகப்பொருளாகவும் காமத்துக்கான தேவையாகவும் மட்டுமே இளைஞர்கள் அணுகுகிறார்கள் என்ற பார்வையும் உள்ளது.
“என்னைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது எல்லோரும் சகமனிதர்கள்தான், சமமானவர்கள்தான் என்ற சிந்தனை மேலோங்கி நிற்க வேண்டும். இந்தக் கருத்தை ‘மங்கை’ படம் வலியுறுத்தும்.
“கல்லூரி மாணவர்கள் தங்களுடன் படிக்கும் மாணவியை அல்லது ஒரே வயது உள்ள தோழியை சமமாகக் கருத வேண்டும். எல்லோருக்குமே உடலில் ஐந்து லிட்டர் ரத்தம் ஓடுகிறது என்பதையும் அனைவருக்குமே இன்பம், துன்பம் போன்ற உணர்வுகள் உள்ளன என்பதையும் உணர வேண்டும்.
“இதுபோன்ற உருப்படியான கருத்துகளை இப்படம் முன்வைக்கும்,” என்கிறார் குபேந்திரன் காமாட்சி.
’மங்கை’ படத்தை உண்மைக்கதை என்றும் வகைப்படுத்தலாம் என்று குறிப்பிடுபவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் தாம் சந்தித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவங்களையும் திரைக்கதையாக எழுதி உள்ளதாகச் சொல்கிறார்.
“ஆனந்தியிடம் கதை சொன்னபோது மிக விரிவாக காட்சிகளை விளக்கினேன். அப்போதுதான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அவர் என்னை வரவேற்ற விதம், மிகுந்த அக்கறையுடன் கதையைக் கேட்டது, அப்போது அவர் வெளிப்படுத்திய முக பாவங்கள் என அனைத்தும் என்னைக் கவர்ந்தன.
“ஒருகட்டத்தில் கதையைக் கேட்டு நடிக்க விருப்பமில்லை என்று ஆனந்தி கூறிவிடக்கூடாது என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது. நல்லவேளையாக அவருக்கு கதை பிடித்துப்போனது,” என்று நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார் குபேந்திரன்.

