அண்மையில் உருவான ‘ரணம்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ‘அட்டகத்தி’ பட நாயகி நந்திதா.
திடீரென வயதான கதாபாத்திரத்தில் நடித்தது ஏன் என்று பலரும் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்கிறார்களாம். அனைவருக்கும் விளக்கம் அளித்தே தாம் சோர்ந்து போய்விட்டதாகச் சொல்கிறார்.
“கதாநாயகியாக வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்போது, பதின்ம வயது பிள்ளைக்குத் தாயாக நடிப்பது சவால்தான். அதிலும் குடும்பப் பெண்ணாக, லேசான ஒப்பனையுடன் நடிப்பது சிரமமாக இருந்தது. எனினும் அது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம். அதுதான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. எனவே தயக்கமின்றி நடித்தேன்,” என்று குங்குமம் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நந்திதா.
தற்போது தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் தாம் ஏற்பதில்லை என்றும் புதிய கதைக்களங்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் தான் தமது தேர்வாக உள்ளது என்றும் கூறுகிறார்.
அண்மையில் வெளியீடு கண்ட படங்களில் சில மாறுபட்ட பாத்திரங்களை ஏற்றேன். மீண்டும் அதே போன்ற வேடங்கள் தேடி வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன் என்கிறார் நந்திதா.
இவர் திரையுலகில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டனவாம். எனவே நல்ல கதாபாத்திரங்களுக்காக கூடுதல் காலம் காத்திருப்பதில் தவறில்லை என்கிறார்.
இவர் இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களில் குமுதா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுபோன்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எல்லா நாயகிகளுக்கும் வாய்த்துவிடாது என்கிறார்.
“சில நிகழ்வுகள் வரலாறு போன்றவை. வரலாறு என்பது அப்படியே இருந்தால்தான் அழகு. அதை உடைத்து மாறுபட்ட வரலாறாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்வது சரியல்ல. எனவே இத்தகைய நோக்கத்துடன் பயணம் மேற்கொள்ள இயலாது.
தொடர்புடைய செய்திகள்
“குமுதா பாத்திரம் போல் மற்றொரு வேடம் அமையவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக இருப்பவற்றை அடையாளம் கண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்,” என்கிறார் நந்திதா.
தெலுங்குப் பட உலகிலும் இவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. அங்கும் நல்ல வேடங்கள் கிடைப்பதால் ஓய்வெடுக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறாராம்.
கடந்த ஆண்டில் ஐந்து தெலுங்குப் படங்களில் நடித்துள்ள நந்திதா, தாம் இதுவரை நடித்த படங்களில் செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்தான் தம்மால் மறக்க இயலாத படைப்பு என்கிறார்.
அந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டாராம். நல்ல நடிகை எனப் பெயர் வாங்கிய பின்னர் எத்தகைய வேடமாக இருந்தாலும் நடிக்கத் தயங்கக்கூடாது என்கிறார்.
“ஒரு நடிகையாக, இப்போதுகூட பள்ளி அல்லது கல்லூரி மாணவியாகக்கூட நடிக்கலாம். ஆனால் நமது நடிப்பு கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். சில கதைகள் நம் மனதிற்கு நெருக்கமானவைகளாக இருக்கும். ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்த போது அத்தகைய உணர்வு ஏற்பட்டது.
“தாய், குழந்தைக்கு இடையேயான தெய்வீக பந்தத்தை வெளிப்படுத்துவது எளிதல்ல. கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்துச் செய்வதால் நமது நடிப்பில் அந்த பந்தத்தைக் கொண்டுவர இயலாது.
“என் அம்மாவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அம்மாவின் பிரதிபலிப்பாகத்தான் தாய் வேடத்தில் நடித்தேன். என் நடிப்பு மனநிறைவு தரும் வகையில் இருந்ததற்கு இதுவே காரணம்,” என்று சொல்லும் நந்திதா, இந்தியில் நடிக்கவும் தயாராக உள்ளாராம்.
இந்தி இணையத் தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருந்தபோதுதான் நந்திதாவின் தந்தை காலமாகி விட்டார். அதனால் அதில் நடிக்க இயலாமல் போய் விட்டதாகச் சொல்கிறார். எனினும் அடுத்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என நம்புகிறாராம்.
தமது திரைப்பயணம் இத்தனை ஆண்டுகளாக நீடிப்பதற்கு சிலர் உதவி செய்துள்ளனர் என்றும் நந்திதா என்ற பெயர் வெளியே தெரிய ‘அட்டக்கத்தி’ இயக்குநர் பா.ரஞ்சித் தான் காரணம் என்றும் நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

