தனு‌‌ஷைப் புகழ்ந்த புதுமுக நடிகை பூர்ணிமா ரவி

2 mins read
a206e7fc-ab5f-4437-941c-458dad4fe67b
பூர்ணிமா ரவி. - படம்: சமூக ஊடகம்

தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி இருக்கும் பூர்ணிமா ரவி தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவர் நடித்து வெளியான ‘செவப்பி’ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிறந்த நடிப்பால் மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடக்கத்தில் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டதாக பூர்ணிமா ரவி தெரிவித்துள்ளார். தற்போது தன்னை முதன்மைப்படுத்தி பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பூர்ணிமா ரவி, தனுஷை குறிப்பிட்டார். மேலும் ஒரு கதாபாத்திரத்திற்காக தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இதே போன்ற நடிப்புத் திறன் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தான் நடிக்கும் 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51ஆவது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்தப் படம் அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாகத் தயாராகிறது. சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சௌரவ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் படங்கள் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு ‘குபேரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘குபேரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிக் கூட்டணியுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த மாதம் ஜனவரியில் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்