தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நல்ல வசூல் இல்லை; புத்தாண்டில் வெற்றிப் படத்துக்காகக் காத்திருக்கும் திரையுலகம்

2 mins read
56208a4c-85ca-44e8-a21c-63ea078f6990
‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படச் சுவரொட்டிகள். - படம்: ஊடகம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியீடு கண்ட தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெற்றிப் படங்களுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் கவலை அடைந்துள்ளதாகக் கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா நெருக்கடி விலகிய பின்னர் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்று திரையுலகத்தினர் அஞ்சினர். எனினும் அச்சமயம் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. இதனால் திரையுலகினர் நம்பிக்கையுடன் உழைக்கத் தொடங்கினார்.

பெரும் வெற்றி (சூப்பர் ஹிட்) என்ற பெருமையைப் பெற குறிப்பிட்ட அளவு வசூலைப் பெற்றிருக்க வேண்டும். விஜய் படம் அத்தகைய வசூலைப் பெற்றிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் தமிழ் சினிமாவுக்கு நல்லபடியாக அமையவில்லை.

2024ஆம் ஆண்டில் இதுவரை 52 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ஒரு படம்கூட பெரும் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

பொங்கல் சமயத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரு படங்களுமே வசூலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ரஜினி கௌரவ வேடத்தில் நடித்த ‘லால் சலாம்’ படமும் சரியாக ஓடவில்லை. ஆனால், மலையாள மொழியில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ தமிழகத்தில் நல்ல வசூல் கண்டுள்ளது.

மலையாளத்தில் நான்கு படங்கள் நல்ல வசூல் கண்டுள்ளன. இதேபோல் தமிழில் இரண்டு படங்கள் சாதித்துள்ளன.

அஜித்தின் ‘விடாமுயற்சி’, விஜயின் ‘கோட்’, விக்ரமின் ‘தங்கலான்’, ரஜினியின் ‘வேட்டையன்’, கமலின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்கள் நல்ல வசூல் காணும் என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

“சில படங்கள் வசூலில் அசத்தியதாக செய்திகள் வெளிவரலாம். ஆனால் திரையுலகில் உள்ள அனைத்துத் தரப்பினரும் லாபமடைய உதவும் படமே பெரும் வெற்றிபெற்ற படம் எனக் கருதப்படுகிறது. அப்போதுதான் மொத்த திரையுலகமும் உற்சாகமாக செயல்பட இயலும். இனி வெளிவரும் படங்களைத் தயாரிப்பவர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்