‘இடி, மின்னல், காதல்’ என்ற மாறுபட்ட தலைப்பில் உருவான படத்தில் நடித்து முடித்துள்ளார் இளம் நாயகி பவ்யா திரிகா.
பாலாஜி மாதவன் இயக்கும் இப்படத்தில் காதலும் மோதலும் சரிவர கலந்திருக்கும் என்று சொல்லும் பவ்யா, இதில் நடித்த அனுபவத்தை எப்போதும் மறக்க இயலாது என்கிறார்.
அதற்கு முக்கியக் காரணம், முதன் முறையாக இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளாராம்.
“சண்டைக்காட்சிகள் இருப்பதாக இயக்குநர் கூறிய உடனேயே உற்சாகமாகி விட்டேன். எனக்காக சில பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான சண்டைக்காட்சிகள் இடம் பெற்று இருந்தன. திறமை வாய்ந்த படக்குழு அமைந்ததால் எந்தவிதச் சிரமும் இன்றி நடித்து முடித்தேன்,” என்கிறார் பவ்யா.
சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது அடிபட வாய்ப்பு உள்ளதாக இவருக்கு நெருக்கமானவர்கள் அக்கறையுடன் கூறியுள்ளனர்.
“உண்மையில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதைவிட தனக்கு நெருக்கமானவர்கள் கூறிய தகவல்கள்தான் பெரிதும் பயமுறுத்தியதாகச் சொல்கிறார்.
சென்னையில் நள்ளிரவு வேளையில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். பவ்யா கார் ஓட்டியபடியே படநாயகனிடம் பேச வேண்டும் என்று இயக்குநர் கூறினாராம்.
“படப்பிடிப்பின்போது இதமான காற்று வீசியது, மொத்த படக்குழுவினரும் அதை ரசித்து அனுபவித்தோம். திட்டமிட்ட காட்சிகளைப் படமாக்கும்போது கிடைத்த இடைவேளைகளில் நானும் நாயகன் சிபியும் எங்களுடைய பள்ளி நாள்களை நினைவுகூர்ந்தோம்.
தொடர்புடைய செய்திகள்
“படப்பிடிப்புக்கு முன்பாகவே பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் படக்குழுவில் உள்ள அனைவரும் இயல்பாக பேசிப் பழகும் அளவுக்கு நண்பர்களாக மாறிவிட்டோம்.
“அந்தப் பயிற்சியால் அனைத்து காட்சிகளும் ஓரே டேக்கில் படமாகிவிட்டன. அதுமட்டும் அல்லாமல் பயிற்சிப் பட்டறையின்போது கதாபாத்திரங்களை நல்ல முறையில் மெருகேற்ற முடிந்தது.
“சண்டைக்காட்சிகளில் நடித்த போது என் மீது அடி விழக்கூடாது என கவலைப்பட்டார் இயக்குநர் பாலாஜி. அந்தக் காட்சிகளில் உடன் நடித்த ‘ஸ்டண்ட்’ நடிகர்களும் என் மீது கைபடாமல் காத்தனர்.
“ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அனைத்தும் இயல்பாக, நம்பும்படியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். ஒரு வேளை எனக்கு தவறுதலாக அடி விழுந்து நான் கதறினாலும் பரவாயில்லை என்றேன்.
“ஏனெனில் இவ்வாறு அழுவதன் மூலமாகத்தான் எனது வலியையும் மன உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலும் என்றேன். அதை இயக்குநரும் ஏற்றுக் கொண்டார்.
“அந்தக் காட்சியின்படி வில்லன்களில் ஒருவர் இவரது தலைமுடியைப் பிடித்து அருகே உள்ள ஒரு காரின் கதவில் மோதுவாராம். காட்சியைப் படமாக்கியபோது பவ்யாவின் முடியைப் பிடித்து காரில் மோதினார் ஸ்டண்ட் நடிகர். அப்போது ‘கடக் கடக்’ என எலும்பு முறியும் ஒலி கேட்டது.
“படக்குழுவைச் சேர்ந்த அனைவருமே எனக்கு அடிபட்டுவிட்டது என நினைத்து பதறிப்போயினர். ஆனால் நல்லவேளையாக நான் அணிந்திருந்த மோதிரம்தான் உடைந்திருந்தது.
“இதை அறிந்த பிறகே படக்குழுவினர் நிம்மதி அடைந்தனர். அந்த அளவுக்கு என் மீது அக்கறையும் பாசமும் காட்டினர்,” என்கிறார் பவ்யா திரிகா.
சண்டைக் காட்சிகளில் இவர் நடித்த விதத்தைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவினரும் வியந்து போனார்களாம்.
அனைவரும் கைத்தட்டியும் அவ்வப்போது உற்சாக வார்த்தைகளைக் கொண்டு தம்மை தன்னம்பிக்கையுடன் செயல்பட வைத்ததாகச் சொல்கிறார்.
“தொடக்கத்தில் தனக்கு நெருக்கமான சிலர் கூறிய அச்சமூட்டும் வார்த்தைகளை மறந்து செயல்பட படக்குழுவினரின் பாராட்டு கைகொடுத்தது. அதற்காக அவர்களுக்கு என் நன்றி.
“இந்தப் படம் முடிந்த பிறகு மாறுபட்ட கதைகளும் கதாபாத்திரங்களும் கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தற்போது சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும்,” என்று பவ்யா மேலும் கூறியுள்ளார்.

