கேரளாவை நிலைகுத்த வைத்த விஜய்யின் பிரவேசம்

கேரளாவை நிலைகுத்த வைத்த விஜய்யின் பிரவேசம்

2 mins read
4c829301-8ff5-4550-92f6-db205ed02a0c
கேரளாவை நிலைகுத்த வைத்த விஜய்யின் பிரவேசம். - படம்: ஊடகம்

நடிகர் விஜய் ‘கோட்’ படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றபோது அந்த இடமே ரசிகர்களின் கூட்டத்தால் நிலைக்குத்திப் போனது. இந்நிகழ்ச்சி கேரள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொள்ள, நடிகர் விஜய்யும் சென்னையில் இருந்து விமானம் மூலம், திருவனந்தபுரம் சென்ற நிலையில் ரசிகர்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் அவரின் கார் மீது விழுந்தபோது சிறிய அளவில் கார் கண்ணாடி சேதமடைந்தது.

தற்போது ‘கோட்’ படத்தின் இறுதிக் காட்சி திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதலே ‘கோட்’ படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஜய் ரசிகர்கள் கூடியதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறி அனைவரின் அன்புக்கும் நன்றி கூறினார். இதுகுறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரியும் நடித்து வருகிறார்கள்.

மேலும் முக்கிய வேடத்தில், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, மைக் மோகன், லைலா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி