தனு‌‌ஷ்: இரண்டு ஆசையில் ஒன்று நிறைவேறிவிட்டது

2 mins read
5896a646-1206-49eb-93db-024cfcb180fb
தனு‌‌ஷ், இளையராஜா, அருண் மாதேஸ்வரன். - படம்: ஊடகம்

தனக்கு வெகு நாள்களாக இளையராஜா, ரஜினிகாந்த் இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை. ஒன்று நிறைவேறிவிட்டது. மற்றொன்று எப்போது என்று தெரியவில்லை என்று நடிகர் தனு‌‌ஷ் கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ‘இளையராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சியில் கமல் முன்னின்று படத்தின் அறிமுக சுவரொட்டியை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கு இளையராஜா என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

படத்தின் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், “நம்மில் பல பேருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜாவின் இசை, பாட்டை கேட்டு தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் நடித்து பார்த்து தூக்கம் இல்லாமல் இருந்துள்ளேன்.

“நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் ரஜினிகாந்த். தற்பொழுது இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து விட்டது. ஓர் ஆசை நிறைவேறிவிட்டது.

“இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை தருகிறது. நான் இளையராஜாவின் ரசிகன், பக்தன்.

“அவரது இசைதான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தாண்டி அவரின் இசைதான் என் நடிப்புக்கு ஆசான்.

“நடிப்புன்னா என்னவென்று தெரியாத காலகட்டத்திலும் சரி, இப்பவும் சரி நான் நடிப்பதற்கு முன் இளையராஜாவின் இசை அந்தக்காட்சியில் எப்படி நடிக்கனும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கும். அதை உள்வாங்கி நடிப்பேன்.

“இந்த வேடத்தில் நடிப்பது பெரிய சவால் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. அவரின் இசை எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லும்.

“இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது கூட இளையராஜா சார் நீங்க முன்னாடி போங்க. உங்க கைய பிடித்துக்கொண்டு நான் பின்னாடி வருகிறேன் என்றேன்.

“அதற்கு அவர் நான் என்ன உனக்கு வழிகாட்டியா என கேட்டார். நீங்க எனக்கு வழிகாட்டிதான். நான் உங்களை பின்பற்றித்தான் வந்து கொண்டு இருக்கிறேன்,’’ என்று பேசினார்.

இதற்கிடையில் இந்தப் படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கிய மூன்று படங்களுமே ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுக்கப்பட்ட வன்முறைப் படங்கள்.

அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர் இசையால் நம்மை எப்போதும் தாலாட்ட வைக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை எவ்வாறு எடுப்பார் என்ற விமர்சனங்களையும் முன் வைக்கிறார்கள் இளையராஜாவின் ரசிகர்கள்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான தனு‌ஷை இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து யாரும் விமர்சிக்கவில்லை.

அதே சமயம், அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்துதான் பல்வேறு கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்குமளவிற்கு அருண் மாதேஸ்வரன் இந்த ‘இளையராஜா’ படத்தைக் உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றனர் ஒரு சாரார்

குறிப்புச் சொற்கள்