ராஜமௌலி படத்திற்குப் பிறகு அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் இயக்குநர் சங்கரின் படமான ‘கேம் சேஞ்சர்’ என்று கூறப்படுகிறது.
சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படம் இந்த ஆண்டு வெளியாகிறது. ராம் சரண் இதில் நடித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி எப்படி அரசியல் அராஜகங்களை எதிர்த்து, தேர்தலை ஒழுங்குபடுத்தி நல்லாட்சிக்கு வழிவகுக்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.
ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
இந்தி தவிர்த்து தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமான ஓடிடி உரிமைக்கு ரூ.150 கோடிகள் அந்நிறுவனம் கொடுத்துள்ளது. ராஜமௌலியின் படம் தவிர எந்தப் படத்துக்கும் இவ்வளவு அதிகத் தொகை கிடைத்ததில்லை என்கிறார்கள்.
தில்ராஜு தயாரித்துவரும் கேம் சேஞ்சருக்கு தமன் இசையமைக்கிறார். மார்ச் 27ஆம் தேதி ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிடுகின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்க்கலாம்.

