ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்துள்ளார் விஷால்.
அடுத்து தாம் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன் 2’ பட வேலைகளில் மூழ்கி இருப்பவர், ‘ரத்னம்’ படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.
இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ பட வெற்றிக்குப் பிறகு, ‘ரத்னம்’ படம் விஷாலுக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் இயக்குநர் ஹரி.
“எனக்கு அதிரடியான சண்டைக் காட்சிகளும் குடும்ப உணர்வுகளும் இரண்டு கண்களைப் போன்றவை. இம்முறை விஷாலுக்காக இப்படத்தில் சண்டைக்காட்சிகள் சற்று கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.
“என்னுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு படத்தை இயக்கி முடித்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது,” என்கிறார் இயக்குநர் ஹரி.
இவர் ஏற்கெனவே விஷாலை வைத்து ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதனால் விஷாலுக்கு ஏற்ற ஒரு கதைக்களத்தை அமைப்பது தமக்கு கடினமான விஷயம் அல்ல என்கிறார்.
“இந்தப் படத்தில் எட்டு வெவ்வேறு சண்டைக்களங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒரு சண்டைக்காட்சி கூட வலிய திணிக்கப்பட்டிருக்காது.
“கதை என்ன கேட்கிறதோ அதற்கேற்ப சண்டைகளும் அமைந்திருக்கும். வழக்கமாக எனது படங்களில் ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக, பரபரப்பான அம்சங்களுடன் வேகமாக நகரும்படி இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்திலும் அது கைகூடி வந்துள்ளது என்று சொல்லும் ஹரி, தற்போது ரசிகர்களின் ரசனை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளதாகச் சொல்கிறார்.
“முன்பெல்லாம் படம் வேகமாக நகர வேண்டும் என்று விரும்பிய ரசிகர்கள், இப்போது திரைக்கதையில் பரபரப்பு, மோதல்களை விரும்புகிறார்கள்.
மேலும், ஒரு கூட்டம் எதையோ தேடுவது, ஓடுவது, அதனால் பிரச்னைகளை எதிர்கொள்வது என ஏதேனும் ஒரு வகையில் விறுவிறுப்பை எதிர்பார்ப்பதாக விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
சரி, ’ரத்னம்’ படத்தின் கதை என்ன?
பாசத்திற்கும் அன்புக்கும் ஏங்கித் தவிக்கும் கதாநாயகன் ஓர் இளம் பெண்ணைக் கண்டதும் தாம் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுவிட்டதாக உணர்கிறான்.
அந்தப் பெண்ணுடனான அவனது பயணம் தொடங்குகிறது. அதன் பின்னர் அந்த இளைஞனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து அவன் எவ்வாறு வெளியே வருகிறான் என்பதுதான் கதையாம்.
இதில் வழக்கம்போல் எதிர்பாராத திருப்பங்கள், சுவாரசியமான அம்சங்கள் இருக்கும் என்பது ஹரியின் உத்தரவாதம்.
இம்முறை யாரும் எதிர்பாராத ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறுபவர், முக்கியமான பிரச்சினை குறித்து விரிவாக அலசப்பட்டதாகவும் சொல்கிறார்.
“கோபக்கார இளைஞனின் கதாபாத்திரத்திற்கு விஷால் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்காக தீவிர உடற் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக என்னிடம் கூறினார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
“நன்கு ஓடுவதற்கு மட்டும் பயிற்சி அளிக்குமாறு அவரது உடற் பயிற்சியாளரிடம் கேட்டுக்கொண்டேன். இப்படத்துக்காக எடுக்கப்பட்ட முதல் சண்டைக் காட்சிக்காக தொடர்ந்து ஐந்து நாள்கள் ஓடி ஓடி சண்டைபோட்டார் விஷால்.
“அவரது தீவிர முயற்சியும் உழைப்பும் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும். இதனால் அவர் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன்.
“கோபம், பாசம், நேசம் என எல்லாம் கலந்துள்ள மண்ணின் மைந்தராக நான் எதிர்பார்த்தபடியே முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்து நின்றார். ‘ரத்னம்’ எப்படி இருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ, அந்த கற்பனைக்கு உயிரூட்டினார் விஷால்.
“இப்படத்தில் விஷால் நடித்துள்ள சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் தங்களது இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கத் தூண்டும்,” என்று விஷாலுக்கு மிகப் பெரிய பாராட்டுச் சான்றிதழ் வாசிக்கிறார் ஹரி.
இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
“திரையுலகில் எல்லாமே சரியாக அமைந்தால்தான் வெற்றி காண முடியும். ஒரு படத்திற்கான நல்ல கதை, தயாரிப்பாளர், ரசிகர்களின் வரவேற்பு, எதிர்பார்ப்பு இருந்தால் வெற்றியுடன் வலம் வரலாம் என்ற சூட்சமத்தை நன்கு அறிந்துள்ளேன்.
“நான் இயக்கிய முந்தைய படத்திலும் பிரியாதான் கதாநாயகி. அவருக்கு தமிழ் தெரியும் என்பது மிகப்பெரிய வசதி. நடிப்பு, நடனம், உழைப்பு என அனைத்து அம்சங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளார் பிரியா.
“விஷால் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் பிரியாவும் இணைந்திருப்பார். வசனங்களை நன்கு புரிந்துகொண்டு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் பிரியா. அவருடன் அடுத்த படத்தில் இணைவதற்குள் இந்த அம்சங்களில் மேலும் நன்கு தேறியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
“யோகிபாபுவை ‘மண்டேலா’ படத்தைப் பார்த்தது முதல் மிகவும் பிடித்துப்போனது. அவருக்கு ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்து வந்தால் கண்டிப்பாக அசத்துவார்.
“சமுத்திரகனியை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கொடூரமான வில்லன், அன்பான தந்தை, அருமையான கணவன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து மனதில் தங்கிவிட்டார்.
“மேலும், கவுதம் மேனன், விஜயகுமார் உள்ளிட்ட மற்றவர்களும் என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பங்களித்துள்ளனர்.
“தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இதமான, அதிரடியான பாடல்கள் உருவாகி உள்ளன. சண்டைக் காட்சிகளை கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன் உள்ளிட்டோர் உயிரைக் கொடுத்து உருவாக்கி உள்ளனர்,” என்கிறார் ஹரி.

