திரைப்பட வாய்ப்புகள் ஒரு பக்கம் இருக்க, இணையத் தொடர்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சுனைனா.
கடந்த சில ஆண்டுகளில் ‘நிலா நிலா ஓடிவா’, ‘சாதரங்கம்’, ‘ஃபிங்கர் பிரிண்ட்ஸ்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து முடித்துள்ளார். இவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்ற தலைப்பில் உருவாகும் இணையத்தொடரில் ‘காத்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளாராம் சுனைனா.
காட்டுக்குள் திடீர் என நிகழும் சில மர்மச் சம்பவங்களின்போது சிலர் இறக்க நேரிடுகிறது. அவ்வாறு இறந்து போனவர்களைச் சுற்றி ஏராளமான பூச்சிகள் கூடுகட்டுகின்றன. பார்ப்பவர்களை மிரள வைக்கும் பூச்சிக் கூடுகள் ஏன் உருவாகின்றன என்பதும் மர்மமாக இருக்கிறது.
இந்த மர்மத்தை காவல்துறை அதிகாரி நவீன் சந்திராவும் வனத்துறை அதிகாரி சுனைனாவும் இணைந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். திகிலும், மர்மங்களும் நிறைந்துள்ள இந்தக் கதையில் பல்வேறு கற்பனையான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த இணையத்தொடரில் தனது கதாபாத்திரம் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சுனைனா.
காத்தி என்ற தனது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை தம்மால் திரையில் நேர்த்தியாக பிரதிபலிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
“ஒட்டு மொத்த படக்குழுவின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தின் மூலம் இயற்கை, அமைதி, மர்மங்கள் நிறைந்த ஓர் உலகத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல முடியும் என நம்புகிறேன்,” என்கிறார் சுனைனா.
‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’, ‘வன்மம்’, ‘தெறி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ்த் திரையுலகில், ‘இயக்குநரின் நடிகை’ என்று பெயர் வாங்கிய நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் வணிக அம்சம் நிறைந்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், பின்னர் தனது நடிப்புக்கு ஏற்ற படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இடைப்பட்ட காலத்தில் சுனைனா கடத்தப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனப் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
எனினும், அனைத்தையும் கடந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
“கடந்த 2018ஆம் ஆண்டு என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக சில முடிவுகளை எடுத்தேன். அவற்றை எந்தவித சமரசமும் இன்றிச் செயல்படுத்துவதால் வாழ்க்கை சிக்கலின்றிச் சென்று கொண்டிருக்கிறது,” என்று சொல்லும் சுனைனா, ‘சில்லு கருப்பட்டி’ போன்ற நல்ல கதைக்களங்களில் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்கிறார்.


