தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டு கில் எ டைகர்’

3 mins read
91726795-7818-4c0f-8463-06b34ec2c4a8
‘டு கில் எ டைகர்’ படத்தில் நடிக்கும் சிறுமி. - படம்: ஊடகம்

13 வயது சிறுமி மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அவரது தந்தை நடத்தும் நீதி யுத்தமே ‘‘டு கில் எ டைகர்’ (To Kill a Tiger) ஆவணப்படம்.

கனடா நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டு அனைத்துலக அளவில் கவனம் ஈர்த்தது. தற்போது இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டதில் உள்ள பெரோ பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது 3 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் ஒருவர் அவர்களது தூரத்து உறவினர். மின் விளக்குகள் கூட இல்லாத மண் வீட்டில் வாழும் மிகவும் பின்தங்கிய குடும்பம்.

வறுமை ஒருபுறம் வாட்டினாலும் தனது மகளின் துணையுடன் நீதிக்கான போராட்டத்தில் களமிறங்குகிறார் தந்தை ரஞ்சித். கிராமத்தினர் எதிர்ப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை மீறி தொடர் சட்ட போராட்டத்தை நடத்துகிறது அக்குடும்பம்.

இறுதியில் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கின் பின்னணியை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, குற்றவாளிகள் தரப்பு, நீதிமன்றம் செல்ல உதவியாக இருந்த என்ஜிஓ தரப்பிலிருந்தும் பேசுகிறது ‘To Kill a Tiger’ ஆவணப்படம்.

நிஷா பஹுஜா இயக்கியுள்ள இந்த ஆவணப் படத்தின் மூலம் சில கிராமங்கள் எவ்வளவு ஆபத்தான பிற்போக்குத் தனங்களை உள்ளடக்கியவை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, “பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை வன்கொடுமை செய்தவருக்கே திருமணம் செய்து வைப்பதுதான் வழக்கம்,” என்கிறார் அக்கிராமத்து பெண்மணி. “அப்படிப் பார்த்தால் ஒரு பெண்ணை பிடித்திருந்தால் பாலியல் வன்கொடுமை செய்தால் போதுமா?” என்ற எதிர்கேள்விக்கு பதில் இல்லை.

“இனி அந்தப் பெண்ணை யார் திருமணம் செய்வார்கள்?”, “கண்ணியம் சீர்குலைந்துவிட்டது”, “எல்லா தவறுக்கும் ஆண்களே காரணமல்ல. பெண்களின் உதட்டுச்சாயம், உடைகளும்தான் காரணம்,” என்கிறார் கிராமத்தின் வார்டு மெம்பர். அடுத்த சில காட்சிகளில் சிறுமி விரல் நகங்களுக்கு பாலிஷ் போடும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

குற்றவாளிகளின் தந்தை பேசும்போது, “ஒரு தடவை மன்னித்துவிட்டால் இனி அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்,” என்கிறார். இப்படியாக மொத்த கிராமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக இருந்த சூழலையும் தனித்தொரு குடும்பம் நிகழ்த்திய போராட்டத்தையும் அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப் படம்.

பிற்போக்குத்தனம் ஊறிய கிராமத்தில் மிகத் தெளிவுடன் அச்சிறுமி பேசுவதும் அதற்காக அவளது பெற்றோர் ஆதரவாக நிற்பதும் ஆச்சரியம். நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி விவரிக்கும் இடங்கள் பெரும் துயர் நிறைந்தது.

சட்டப் போராட்டத்தினால் அவர்களுக்கு கிடைத்த வெற்றி தனிப்பட்ட அச்சிறுமிக்கானது அல்ல; ஒட்டுமொத்த கிராமத்தின் சிறுமிகளுக்குமானது என்பதை இறுதியில் அவர் தந்தை சொல்லும் இடம் கவனிக்க வைக்கிறது.

மேலும், இந்த ஆவணப்படம் கிராமங்களில் நிலவும் பிற்போக்குத்தனத்தையும், பாதிக்கப்பட்ட மக்கள் தனித்து விடப்படுவதையும் அவர்களின் வலியையும் அழுத்தமாக பதியவைக்கிறது. “இனி என்ன நடந்தாலும் மகளுக்காகப் போராடப்போகிறேன்,” என தந்தை சொல்லும் இடமும் “நீ ஜெயிச்சுட்ட,” என மகளிடம் சொல்லும் இடமும் நெகிழ வைக்கிறது.

“புலியை தனியா கொல்ல முடியாதுன்னு சொன்னாங்க; நான் அத செஞ்சு காட்டுறேன்னு சொல்லி இப்போ அத சாத்தியப்படுத்தியிருக்கேன்” என தந்தை ரஞ்சித் பேசும் வசனத்திலிருந்து தான் ஆவணப் படத்துக்கு ‘To kill a Tiger’ என பெயரிடப்பட்டுள்ளது.

சிறுமியின் பெயர் கிரண் என அடையாளம் மாற்றப்பட்டுள்ளது. பெயரை மாற்றியிருந்தாலும் அவரை படம்பிடித்து காட்டி அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. சிறுமியின் ஒப்புதலுடன் படமாக்கப்பட்டிருப்பதாக கூறினாலும் அவரது கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவிர்த்திருக்கலாம் என்ற கருத்துகளும் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, உண்மைச் சம்பவத்தை வலியுடன் பதிவு செய்திருக்கும் ஆவணப் படம் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்