நடிகருடன் இரண்டாம் திருமணம் வதந்திக்கு மீனா கண்டனம்

2 mins read
e466378a-12ff-403a-a174-c6acc5328cf7
நடிகை மீனா. - படம்: ஊடகம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக தொடர்ந்து வதந்தி பரவி வரும் சூழலில், கடும் கோபம் அடைந்த மீனா சமூக ஊடகங்களுக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகன்களின் ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மீனா.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தச் சூழலில், 2022ல் வித்யா சாகர் உடல்நலக் குறைவினால் மரணம் அடைந்தார். அதன்பிறகு 47 வயதான மீனா இரண்டாவது திருமணத்துக்குத் தயாராகிவிட்டதாகவும் நடிகர் ஒருவருடன் இணைத்தும் சமூக ஊடகத்தில் தகவல்கள் பரவின.

இதுகுறித்து மீனா பலமுறை விளக்கம் அளித்தும் வதந்திகள் ஓயாததால், மீனா இப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சமூக ஊடகத்தில் உண்மைகளை மட்டுமே சொல்லுங்கள். தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.

“நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர், குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு இரண்டாவது திருமணம் செய்வது குறித்து எனக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது என்ன சொல்லமுடியும்?

“இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல்களைச் சரிபார்க்காமல் அதை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்தவேண்டும். எனது வாழ்க்கை இப்போது திருப்திகரமாக சென்றுகொண்டு உள்ளது. இதுபோன்ற வதந்தியை யாரும் கண்டுகொள்ளாதீர்கள்,” என மீனா கூறியுள்ளார்.

மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்