தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெற்றோருக்குத் தெரியாமல் நடித்ததே பெரும் சவால்: ஸ்மிருதி வெங்கட்

3 mins read
d2e1b4ad-d07c-4ff2-b4df-4a69d9037aef
நடிகை ஸ்மிருதி வெங்கட். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘தடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’, ‘மாறன்’, ‘வனம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படலாம்’ உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்தவர், இப்போது ‘டபுள் டக்கர்’, ‘தருணம்’ படங்களின் வெளியீட்டிற்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.

தன் பெற்றோருக்குத் தெரியாமல் ‘தடம்’ படத்தில் நடித்து முடித்ததுதான் தன் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் எனவும் தமிழக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

“தடம்’ படத்தில் நடிப்பது குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால், நடிப்பதற்கு என் பெற்றோர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

“அதற்கு முன்னதாக ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடிக்க இருந்தபோதும் அம்மா நடிக்கக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள்.

“எனவே, மறுபடியும் படத்தில் நடிக்கப் போவதாகக் கூறினால் அந்த நினைப்புக்கு முழுக்குபோடும்படி கூறிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் பெற்றோரிடம் சொல்லாமலேயே ‘தடம்’ படத்தில் ஒப்பந்தமானேன்.

“அதன்பின்னர் அப்படம் முடியும் வரை சினிமாவில் நடிக்கும் விஷயத்தை வீட்டில் மூடி மறைத்து விட்டேன். அதுதான் நான் வாழ்க்கையில் எடுத்த பெரிய ரிஸ்க்கான காரியம்,” என்கிறார் ஸ்மிருதி வெங்கட்.

அந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டிய பிறகுதான் படத்தில் நடித்தது குறித்து வீட்டில் சொன்னேன். படம் திருப்தி தந்ததால் அதன்பின்னர் சினிமாவில் நடிக்க என் பெற்றோர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

திரையுலகைச் சேர்ந்த பலரும் தனக்கு முன்மாதிரியாக இருந்து வருவதாகக் கூறும் ஸ்மிருதி, “நயன்தாராவின் நேரம் தவறாமை, நடிகை ஊர்வசியின் சரளமான பேச்சு, ‘மரியான்’ பார்வதி, ‘குயின்’ கங்கனா ரணாவத் ஆகியோரைப் பிடிக்கும்,” என்கிறார்.

“என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறேன். அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான வேடங்கள் அமையாவிடில் நடிக்க ஒத்துக்கொள்வது இல்லை.

“ஒவ்வொரு படத்திலும் ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொகிறேன். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஊர்வசி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலி ஆகிய பல கலைஞர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘டபுள் டக்கர்’ படத்தில் கோவை சரளாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“இதுபோல் பல கலைஞர்களுடனும் இணைந்து நடிப்பதை நேர்மறையாகப் பார்க்கிறேன். யாருடன் நடித்தாலும் அவர்களிடமிருந்து எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் பார்ப்பேன்.

“நயன்தாரா, தனுஷ் போன்ற கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

“பெரிய, முன்னணி கலைஞர்களுடன் நடிக்கும்போது நமக்குப் பெயர் கிடைக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் நினைத்ததில்லை,” என மனம் விட்டுப் பேசியுள்ளார் ஸ்மிருதி.

முதல் படம் ‘தடம்’ பண்ணும்போது சற்று பதற்றமாக இருந்தாலும், இப்போது அப்படி இல்லை என்று கூறியுள்ள ஸ்மிருதி, “எதிர்மறை பாத்திரங்களில் நடிப்பதற்கு இப்போது விரும்பவில்லை. ஒருசமயம் எதிர்காலத்தில் பண்ணும் வாய்ப்புள்ளது.

என் நடிப்புக்கு நான் மதிப்பெண் கொடுத்துக் கொண்டது இல்லை. ‘மூக்குத்தி அம்மன்’ பார்த்து விட்டு எஸ்.ஜே.சூர்யா சார் பாராட்டினார். நடிகரும் இயக்குநருமான அவருடைய பாராட்டு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. என் நடிப்பின் மீது நம்பிக்கை அதிகரித்தது என்கிறார் ஸ்மிருதி.

“இதுவரை நடித்த படங்களில் எல்லாம் நன்றாக நடித்திருப்பதாக ஒரு திருப்தி உள்ளது. விரைவில் இரண்டு, மூன்று நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பேய் படங்களும் கைவசம் உள்ளன.

“துரித உணவுகளைத் தவிர்த்து வீட்டு உணவைச் சாப்பிட முடிவெடுத்துள்ளேன்.

“ஷாப்பிங் விஷயத்தில் பெண்களைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம்தான். அதற்காக நான் அதிகம் செலவு செய்யமாட்டேன். ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்வேன்.

“சில நேரங்களில் இரண்டு, மூன்று மாதங்கள் கடைத்தெருக்களைச் சுற்றாமலும் இருந்திருக்கிறேன்,” என்கிறார்.

“எனது உயிர்த்தோழி கனடாவில் வசித்து வருகிறார். எனக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அவருடன் பத்து, பதினைந்து நிமிடங்கள் மனம்விட்டுப் பேசுவேன். கவலைகள் பறந்து உற்சாகமாகிவிடுவேன்.

“படப்பிடிப்பு இருந்தால் அதிகாலையில் எழுந்துவிடுவேன். மற்ற சமயத்தில் கொஞ்சம் தாமதமாக எழுவேன். நண்பர்களுடன் நேரம் செலவிடுவேன்.

“எனது நண்பர் ஒருவர் காபிக் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு அடிக்கடி செல்வேன். உணவு சம்பந்தமாக சிறிய அளவில் தொழில் தொடங்கும் யோசனையும் உள்ளது,” என மனம் திறந்துள்ளார் நடிகை ஸ்மிருதி வெங்கட்.

குறிப்புச் சொற்கள்