மாறுபட்ட வில்லத்தன நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி காலமானார்

1 mins read
453f33d8-331d-45d2-a456-f9a4270ad8f1
டேனியல் பாலாஜி. - படங்கள்: ஊடகம்

தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது தமிழ்த் திரை உலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

48 வயதான அவர், மார்ச் 29 ஆம் தேதி இரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக படப்பிடிப்பு இல்லாததால் ஓய்வில் இருந்து வந்துள்ளார் டேனியல் பாலாஜி.

வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஐம்பது வயதைக்கூட எட்டாத நிலையில் அவர் மரணம் எய்தியிருப்பது திரையுலகத்தினரை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

அலட்சியமான, வில்லத்தனமான பார்வை, அச்சமூட்டும் சிரிப்பு, வசனங்களைத் திமிராக உச்சரிக்கும் பாங்கு என திரையில் வில்லத்தனம் செய்து ரசிகர்களைத் தன்வசப்படுத்தினார் டேனியல் பாலாஜி.

அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வெளிப் படுத்திய மிரட்டலான நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்