ஏழை, எளியவர்களைத் தாமே தேடிச்சென்று உதவி வரும் சின்னத்திரை கலைஞர் பாலாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், மருந்துகள் வாங்கிக்கொடுப்பது, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பது எனப் பலருக்கும் பல்வேறு வகையிலும் உதவிக்கரம் நீட்டுகிறார் பாலா.
இந்நிலையில், தின்பண்டங்கள் விற்று பிழைப்பு நடத்தி வரும் முருகம்மாள் என்ற பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா.
இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், முருகம்மாள் சென்னையில் மின்சார ரயில்களில் சமோசாக்கள் விற்று வருவதாகவும் திருமணமான சில ஆண்டுகளிலேயே முருகம்மாள் தனது கணவரை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“முருகம்மாளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர் கடுமையாக உழைத்து மூன்று குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பதுதான் இவரது பெரும் கனவு.
“இதை அறிந்தவுடன் எனது முன்மாதிரியாகக் கருதும் நடிகர் ராகவா லாரன்ஸின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அவரது உதவியுடன் முருகம்மாளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார் பாலா.
அதுமட்டுமல்ல, மிக விரைவில் ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
“நான் படிக்க வைக்கும் ஒரு மாணவர் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் மருத்துவமனை கட்டும் பணியில் இந்த மாணவர் உதவி செய்வார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த மருத்துவமனையில் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே விருப்பம்,” என்று குறிப்பிட்டுள்ளார் பாலா.

