தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யா எதிர்கொள்ளும் சில சவால்கள், சுவாரசியங்கள்

2 mins read
f60eb077-da93-4629-ab59-d95cab267c71
சூர்யா. - படம்: ஊடகம்

நடிகர் சூர்யா அடுத்தடுத்து தாம் நடிக்க உள்ள படங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இதற்காக அவர் சில சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அது குறித்த சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகி உள்ளது.

தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து ‘புறநானூறு’ என்ற படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜை அண்மையில் சந்தித்துப் பேசினாராம். அப்போது அவர் கூறிய கதை சூர்யாவின் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.

எனவேதான் ‘புறநானூறு’ படம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போனதாகத் தெரிகிறது. ‘கங்குவா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஓரிரு நாள்கள் நடக்க உள்ளதாகத் தகவல்.

இந்நிலையில் இப்படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா. குறிப்பாக, ‘கிராபிஃக்ஸ்’ காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சி அமைப்பை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் தாம் நடித்துள்ள காட்சிகளுக்கான வசனங்களுக்குப் பின்னணிக் குரல் பதிவுப் பணியையும் முடித்துவிட்டார் சூர்யா.

முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறுப்பட்டது. ‘புறநானூறு’ என்ற தலைப்புடன் சூர்யாவின் 43வது படமாக இது உருவாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மதுரையில் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிப்பு வெளியானது மட்டுமல்லாமல் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் ‘புறநானூறு’ படத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய தமக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்ததை அடுத்து, தனது திட்டத்தை அடியோடு புரட்டிப்போட்டுள்ளார் சூர்யா.

அதன்படிதான் கார்த்திக் சுப்பராஜ் இவரைச் சந்தித்து தன் கைவசம் உள்ள கதையை விவரித்துள்ளார். கதை மிகவும் பிடித்துப்போனதால் உடனடியாக கால்ஷீட் தர முன்வந்துள்ளார் சூர்யா.

இருவரும் இணையும் படத்துக்கான தலைப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், தலைப்பின் கீழே ‘காதல் சிரிப்பு போர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக சுதா கொங்கரா தனது படத்துக்கான கதை விவாதத்துக்கு கணிசமான நேரம் எடுத்துக்கொள்வார். இதை கவனத்தில் கொண்டுதான் இடைப்பட்ட காலத்தில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதாகத் தகவல்.

சூர்யாவிடம் கதை சொன்ன கையோடு திரைக்கதை அமைப்பதிலும் படப்பிடிப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத் தடுத்து வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சூர்யாவின் அடுத் தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குநர்களின் பட்டியலில் வெற்றி மாறன், ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஞானவேல் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருமே தங்களுடைய கதையை ஓரிரு வரிகளில் சூர்யாவிடம் விளக்கிய கையோடு முழுக்கதையையும் திரைக்கதையையும் மெருகேற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி